
கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சுவர் ஓவியங்கள் வரைவதன் மூலம் கரோனா பொது முடக்கத்தைப் பயனுள்ளதாக மாற்றியுள்ளார் கல்லூரி மாணவர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கரோனா பொதுமுடக்க காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சுவர் ஓவியங்கள், ஓவியங்கள் வரைவதன் மூலம் பயனுள்ளதாக மாற்றியுள்ளார்.
மயிலாடுதுறை நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலி (வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார். சிறு வயது முதல் ஓவியக் கலையில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 5 மாதங்களாக பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை, தனது கலையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்தி, சுவர் ஓவியங்கள், ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு என செய்து அசத்தி வருகிறார்.
இதற்காக, தனியாக எந்த பொருளையும் விலை கொடுத்து வாங்காத மாலி, வீட்டில் உபயோகப்படுத்தியபின் தூக்கி எறியும் வாட்டர் பாட்டில்கள், தர்மாகோல், கார்ட்போர்டு ஷீட், ஐஸ்கிரீம் ஸ்டிக், தேங்காய் ஓடு போன்றவற்றையே தனது கைவினைப் பொருள்கள் தயாரிப்புக்குரிய உபகரணங்களாக மாற்றிக் கொண்டுள்ளார்.
மேலும், தனது வீட்டின் சுவர் முழுவதையும் தனக்கான சுவர் ஓவியங்கள் வரையும் களமாக மாற்றி பல்வேறு வகையான சுவரோவியங்களை வரைந்துள்ளார் இந்த மாணவர். மேலும், அரசியல், சினிமா பிரமுகர்களின் படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு, சில நிமிடங்களிலேயே அதனை உயிரோவியமாக மாற்றும் கலையை கற்றுத் தேர்ந்துள்ளார். தற்போது கல்லூரி ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் தனது ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டுள்ள இந்த மாணவர் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.