

ராமநாதபுரத்தில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் திங்கள்கிழமை மாலை குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வசந்த நகர் கள்ளர் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (22). இவரது நண்பர்களுக்கும் கான்சாய் தெரு பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை பகலில் அருண்பிரகாஷும், அவரது நண்பர் யோகேஸ்வரன் (23)
என்பவரும் கள்ளர் தெரு பிரதான சாலையிலுள்ள வங்கி ஏடிஏம் மையம் அருகே
பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது 3 இருசக்கர வாகனங்களில் கும்பலாக வந்த சிலர் திடீரென அருண்பிரகாஷின் வலது பக்க முதுகில் குத்தியுள்ளனர். அவருடன் இருந்த யோகேஸ்வரனுக்கும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் அருண் பிரகாஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கேணிக்கரை காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமிரா காட்சிகள் மூலம் கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இந்தக் கொலை சம்பவத்தில் 9 பேர் வரை ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.