7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரை: முதல்வர்

பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
1 min read

பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாரி ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் பொதுப் பெயரிடக் கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப் பெற்றது. இக்கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்கும் வகையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராகக் கொண்ட குழு ஒன்றை 4.3.2019 அன்று அமைத்து  அம்மாவின் அரசு ஆணையிட்டது.
இக்குழு அரசால் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. இக்குழு இந்த நேர்வுக்குத் தொடர்புடைய பல்வேறு தரப்பினரது கோரிக்கைகள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில பட்டியலினத்திலுள்ள வாதிரியான் என்ற உட்பிரிவையும் உள்ளடக்கி கீழ்க்கண்ட 7 உப சாதிகளை சார்ந்தவர்கள் அதாவது, (1) தேவேந்திரகுலத்தான் (2) கடையன் (3) காலாடி (4) குடும்பன் (5) பள்ளன் (6) பன்னாரி (7) வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்துள்ளது. 
இந்தப் பரிந்துரைகளை ஏற்று, மேற்குறிப்பிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்கள் இனி தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும். மேலும், தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட 7 சாதி உட்பிரிவிலும் தற்போதைய சமூகப் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரவும் குழு பரிந்துரைத்துள்ளது. தேவேந்திரகுல வேளாளர் என்ற பொது பெயரிட்டாலும் இக்குழுவினர் ஏற்கனவே பெறப்படும் சலுகைகள் தொடரும். இதற்கான ஆணையை அம்மாவின் அரசு விரைவில் பிறப்பிக்கும். மேலும், மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணை பெற அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com