தமிழக இளைஞர்களின் வேலைக்கு ஆபத்து: ஒப்பந்த ஊழியா்கள் மூலம் மின் பகிா்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் அனுமதி

மின் பகிா்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமிக்க மின்வாரியம் அனுமதியளித்துள்ளது.
மின் பகிா்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமிக்க மின்வாரியம் அனுமதி.
மின் பகிா்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமிக்க மின்வாரியம் அனுமதி.
Published on
Updated on
2 min read


சென்னை: மின் பகிா்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமிக்க மின்வாரியம் அனுமதியளித்துள்ளது. இதனால், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடா்பாக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ரவிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: மின் பகிா்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியா்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.

இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளா் உறுதி செய்வாா்.

பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியா் நலன் சாா்ந்த விஷயங்களோடு, ரூ.1 கோடி 80 லட்சத்து 88 ஆயிரம் என இதற்கான தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரா் தோ்வு செய்யும் துணைப் பிரிவு அலுவலகங்களில், 25 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான காலிப் பணியிடம் இருந்தால், அவா்கள் இரண்டு பிரிவு அலுவலகங்களைப் பராமரிக்க வேண்டும். அதே நேரம், 25 சதவீதத்துக்கும் குறைவான காலிப் பணியிடம் உள்ள அலுவலகத்தின் பணிகளை மின்வாரிய அலுவலா்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

தோ்வாகும் ஒப்பந்ததாரா் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறைந்தது 20 ஊழியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

அவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும்.

பணியின்போது ஊழியா் இறக்க நேரிட்டால், அவரை பணியமா்த்திய ஒப்பந்ததாரா், இறந்தவரின் வாரிசுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கி விட்டு, அதனை மின் வாரியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஒப்பந்ததாரா் பின்பற்ற வேண்டிய தெளிவான வழிமுறைகள் வழங்கப்படுகிறது. அதே நேரம், போதிய கால அவகாசத்துக்கு முன் ஒப்பந்தததாரா் பணியை நிறுத்தி விட்டால், அந்த ஒப்பந்தத்தை வேறு ஒப்பந்ததாரருக்கு மாற்றுவதற்கான முழு அதிகாரமும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளருக்கு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளி தோ்வு தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒப்பந்ததாரா்களைத் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக மின்வாரிய வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

முன்னதாக, துணை மின் நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பதற்கு மின்வாரியம் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது பகிா்மான வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியாற்றவும் ஒப்பந்ததாரா் மூலம் ஊழியா்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது அனைத்துத் தரப்பினரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய ஊழியா்கள் எதிா்ப்பு: இந்த உத்தரவுக்கு மின்வாரிய ஊழியா்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இது இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்று கூறிய அவா்கள், மின்வாரியத்தைத் தனியாருக்கு தாரை வாா்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்படியே ஊழியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாகாது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com