புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்.
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு 60 அடியை தொட்ட புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை: வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீர்மட்டம், 4 ஆண்டுகளுக்கு பிறகு 60 அடியை தொட்டுள்ளது.

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் நீர்மட்டம், 4 ஆண்டுகளுக்கு பிறகு 60 அடியை தொட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்க வேண்டுமென, அதிகாரிகள்-விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நீராதாரம் பெறுகின்றன.

வாழப்பாடியில் நடைபெற்ற ஆணைமடுவு அணை பாசன விவசாயிகள்-அதிகாரிகள் முத்தரப்பு கூட்டம்.

5 ஆண்டுகளாக அணை நிரம்பாததால் வசிஷ்ட நதியில் உபரிநீர் திறக்கப்படவில்லை. இதனால் வசிஷ்ட நதி நீர்வரத்தின்றி வறண்டு புதர்மண்டி கிடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் ஆற்றுப்படுகை விவசாயிகளும் பயிர் செய்ய வழியின்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரு மாதமாக பரவலாக பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி 28.21 அடியாக இருந்த ஆனைமடுவு அணையின் நீர்மட்டம், நவம்பர் 3 ஆம் தேதி 47.57 அடியாக உயர்ந்தது. அணையில் 111.47 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. நவம்பர் 18 இல் அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், டிசம்பர் 1 இல் 52 அடியாகவும் உயர்ந்தது.

டிசம்பர் 9 இல் அணையின் நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்து, அணையில் 164 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியது.  சனிக்கிழமை நிலவரப்படி, அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து 195 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியை தொட்டுள்ளதால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மட்டுமின்றி, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

இதற்கிடையே, அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள், நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் மற்றும் அனைத்துறை அதிகாரிகள் முத்தரப்பு கலந்தாய்வுக் கூட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதாராணி, வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி, ஒன்றியக்குழு பெருந்தலைவர் சதீஸ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், வாசுதேவன் மற்றும் இரு தரப்பு விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

பரவலாக பெய்து வரும் மழையால் ஈரப்பதம் காணப்படுவதால், எளிதில் ஏரிகள் நீர்வரத்து பெறவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்திடவும், ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுமென நேரடி ஆற்றுபாசனம் மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

புதர்மண்டி கிடக்கும் அணைப்பாசன வாய்க்கால்களை துார்வாரி சீரமைத்த பிறகு, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டுமென அணை வாயக்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இரு தரப்பு கோரிக்கைகளையும் பதிவு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக அரசு அறிக்கை சமர்பித்து, அரசு உத்தரவுப்படி, அணை பாசனத்திற்கு  வாய்க்காலிலும், நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனத்திற்கு வசிஷ்டநதியிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com