புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு: மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பேட்டி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றார் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்.

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றார் மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள்தான் தவறான பிரசாரம் செய்து வருகின்றன.

இப்புதிய சட்டங்களின் மூலம் இடைத்தரகர்கள் பிரச்னைகளிலிருந்து விவசாயிகள் விடுபடமுடியும். அதேசமயம் கமிஷன் மண்டிகள் செயல்படும். அதில் எந்த வித பிரச்னையும் இருக்காது.

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களை இடைத்தரகர்கள்தான் விலை நிர்ணயம் செய்கின்றன. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைபொருளுக்குத் தாங்களே விலை நிர்ணயித்து எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம்.

மேலும், நெல், கோதுமை உள்பட அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க இச்சட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அது வழக்கம்போல தொடரும்.

ஒப்பந்தச் சாகுபடி முறையிலும் விவசாயிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக விலையைப் பெற முடியும். 

சந்தையில் விலை குறைந்தாலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைதான் விவசாயிகளுக்குக் கிடைக்கும். சந்தையில் விலை அதிகரிக்கும்போது விவசாயிகளுக்குக் கூடுதல் விலையைப் பெறலாம். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது.

ஒட்டுமொத்தத்தில் விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எல்லா வகையிலும் விவசாயிகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதிபடுத்துகிறது என்றார் வி.கே. சிங்.

 அப்போது பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com