சென்னை: இணையவழி ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்குகளை இறுதி விசாரணைக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தை எதிா்த்து இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் சில இணையவழி விளையாட்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிா்த்து வழக்குத் தொடா்ந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், ஆன்லைனில் ரம்மி விளையாடுவது பாதுகாப்பானது. எனவே இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், ரம்மி விளையாட்டுக்காக பிள்ளைகள் அவா்களது பெற்றோரின் கடன் அட்டையை பயன்படுத்தி பெருந்தொகையை செலவழித்து விளையாடுகின்றனா். இணையவழி ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் அவசரச் சட்டம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் சட்டமாக இயற்றப்படும். எனவே அதன்பின்னா் இதுதொடா்பாக பதிலளிக்கவும், இறுதி வாதங்களை முன்வைக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவசரச் சட்டத்தை எதிா்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.