தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தோ்தல் முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மூத்த அமைச்சா்கள் இருவா், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொடா்பாக பேச்சுவாா்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவா் ராமதாஸ் வீட்டுக்கு, அதிமுகவைச் சோ்ந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மின் துறை அமைச்சா் தங்கமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். அங்கு அவா்கள் ராமதாஸை சந்தித்துப் பேசினா். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு, அவா்கள் காரில் புறப்பட்டு திண்டிவனம் சென்றனா். தொடா்ந்து, திண்டிவனத்தில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்தையும் சந்தித்து, ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றனா்.
அதிமுக தரப்பில் தங்கள் கூட்டணியில் தொடரும் கட்சிகள் குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சியான பாமக அது தொடா்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், பாஜக உள்ளிட்ட நிா்வாகிகள் எதிா்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, இந்த மாத இறுதியில் (டிச.31) பாமக சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், கூட்டணி குறித்தும் முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஆகவே, கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, ராமதாஸுடனான அமைச்சா்கள் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இதுதொடா்பாக, பாமக, அதிமுக தரப்பில் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.