சிறுபுலியூர் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

சிறுபுலியூர் ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.
 சிறுபுலியூர் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு.
 சிறுபுலியூர் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு.
Published on
Updated on
2 min read



நன்னிலம்: சிறுபுலியூர் ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகில் சிறப்புப் பெற்ற சிறுபுலியூர் உள்ளது. இங்கு புகழ்பெற்ற ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் 11வது பதியாக விளங்குகிறது. 

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. ஸ்ரீரங்கம் போன்றே இங்கும் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் தெற்கு நோக்கிய வண்ணமாக சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். 'கருடா சௌக்யமா என்று ஆதிசேஷன் கேட்க அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்யமே' என்று சொல்லப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்தலம். 

ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் ஏற்பட்ட கொடிய பகை தீர, ஆதிசேஷன் பல இடங்களுக்குச் சென்று ஓடி ஒளிந்து, திரிந்து இறுதியில் சிறுபுலியூரில், தன்னைக் காக்க வேண்டி பெருமாளை நோக்கி தவம் செய்ய, பெருமாள் அபயம் தந்து தனக்குச் சயனமாக ஏற்றுக் கொண்டு, இங்கு பாலசயனமாக (சிறு உருவமாக) திவ்ய ஸேவைச் ஸாதிக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்குச் சன்னதியும் உள்ளது தனிச்சிறப்பு. 

இவ்வாறு சிறப்புப் பெற்ற சிறுபுலியூர் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசித் திருவிழாவையொட்டி நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து உற்சவத்தின் முக்கிய தினமான, மார்கழி மாத ஏகாதசி தினமான வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் அருமா கடலமுதப்பெருமாளுக்குத் தங்க முலாம் பூசிய கவச ஸேவையும், சரியாக காலை ஐந்து முப்பது மணி அளவில், ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் தங்க தோளுக்கினியானில் எழுந்தருளி பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. 

பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது திரளானப் பக்தர்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பெருமாளைத் தரிசித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் ப.மாதவன், செயல்அலுவலர் மா. இராமநாதன்,  பட்டாச்சாரியார் ஸ்ரீகாந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும், கிராம முக்கியஸ்தர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். பேரளம் காவல்துறை ஆய்வாளர் இரா.செல்வி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com