
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி பெருமாள் கோவில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பட்டது. பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை வீரழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவர் சுந்தரராஜப் பெருமாளுக்கும் உற்சவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று மூலவர் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து உற்சவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டதும் கோவில் மண்டபத்திலிருந்து பெருமாள் வெளியேறினார். பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு பின்தொடர்ந்து வந்தனர். கோவில் உள்பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வந்த சுந்தரராஜப் பெருமாள் தாயார் சன்னதி முகப்பு மண்டபம் சென்றடைந்து அங்கு தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசுவாமியை தரிசனம் செய்து பின்னர் சுந்தரராஜப் பெருமாளையும் செளந்திரவல்லித் தாயாராயைம் தரிசனம் செய்தனர்.
மானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உற்சவர் ஷேச வாகனத்தில் சயன அலங்காரத்தில் எழுந்தருளி பரமபதவாசல் கடந்து பின்னர் கொழு மண்டபத்தில் தங்கி அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தியாக விநோதப் பெருமாளை தரிசித்தனர். மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள பல பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.