அம்பை, பாபநாசம், கடையம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை

அம்பாசமுத்திரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற தாண்டவ தீபாராதனை.
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற தாண்டவ தீபாராதனை.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

பாபநாசம், அருள்மிகு பாபநாசசாமி திருக்கோவிலில், மார்கழி மாத பத்துநாள் திருவாதிரை திருவிழா டிச. 21 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து டிச.27 ஞாயிற்றுக்கிழமை நடராஜருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம், டிச. 28 திங்கள்கிழமை காலை நடராஜபெருமானுக்கு வெள்ளை சாத்தி அலங்காரம், மாலை நடராஜபெருமானுக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்றது. 

இதையடுத்து புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஸ்நபனம், ஹோமம், கும்ப பூஜையும் காலை 4 மணிக்கு கந்த தைலம், மா பொடி. மஞ்சள், திரவியம், நெல்லிப் பொடி, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், சந்தணம், இளநீர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

பாபநாசம் சிவன்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்த நடராஜர்.

காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜையைத் தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நாள்தோறும் திருமுறை பாராயணம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. புதன்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4.0 மணிக்கு சிறப்பு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.  

அம்பாசமுத்திரம் அம்மையப்பர் கோவில், திருமூல நாத சாமி கோவில், வீரமார்த்தேண்டேஸ்வரர் கோயில், கல்லிடைக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், கடையம் வில்வவனநாதர் கோவில், சிவசைலம் சிவசைலநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com