தொப்பூரில் லாரிகள் மோதி விபத்து: 11 பேர் காயம், 14 எருமைகள் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 11பேர் காயமடைந்தனர். மேலும் 14 எருமைகள் உயிரிழந்தன.
விபத்துக்குள்ளான வீடு.
விபத்துக்குள்ளான வீடு.


தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூரில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 11பேர் காயமடைந்தனர். மேலும் 14 எருமைகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மாரியப்பன் மகன் செல்வகுமார் (42). லாரி ஓட்டுநரான இவர் ஆந்திராவிலிருந்து கேரள மாநிலத்திற்கு எருமைகளை ஏற்றிக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தார். 

இந்த லாரியில் திண்டுக்கல் மாவட்டம் தேவகோட்டம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (40), ஆந்திராவைச் சேர்ந்த பாருக், நூர் பாஷா, மெக பூபாஷா ஆகிய 5  பேர் லாரியில் வந்து கொண்டிருந்தனர். 

லாரி தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்தது.  அப்போது பின்னால் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு பெயிண்ட் சுமை ஏற்றிக்கொண்டு 5வந்த லாரியை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சின்னப்ப ராஜ் மகன் வசந்த் குமார் (35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது இந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் எருமைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது மோதியது. 

இதில், எருமைகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையின் இடதுபுறமாக இருந்த கடையின் உள்ளே நுழைந்து அங்கிருந்த வீட்டின் சுவரை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேசன் (30), அவரது மனைவி தீபா (25), இவர்களது மகள்கள் வைஷ்ணவி (5) ராதிகா ( 4), தனு ஸ்ரீ (3) ஆகியோர் மற்றும் லாரியில் வந்தவர்கள் உள்பட 11 பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 14 எருமைகள் உயிரிழந்தன. 

இது குறித்து தகவலறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com