

விழுப்புரம்: தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிகளவில் சவுக்கு பயிரிட்டு வரும் விவசாயிகள், நீண்டகாலமாக உரிய விலை கிடைக்காமல் நலிவடைந்துள்ளனர். காகித தொழிற்சாலை வேண்டுமென்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தியில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் சுமார் 5.50 லட்சம் பேர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் 6 லட்சம் ஹெக்டர் அளவில் விவசாயம் நடைபெறுகிறது.
வறட்சியைத் தாங்கி வளரும் சவுக்கு: விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக சவுக்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. சவுக்கு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மரப்பயிராகும். ஊசி இலைகளுடன் நீண்டு வளரும் பசுமையான விழுப்புரம் மட்டுமல்லாது கடலூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் போதிய மழையின்மை, நிலத்தடி நீராதாரம் பாதிப்பு போன்ற காரணங்களால் நெல், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பெருமளவில் சவுக்கு சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், திருக்கோவிலூர் பகுதிகளில் அதிகளவில் சவுக்கு விளைவிக்கப்படுகிறது. வறட்சியைத் தாங்கி நிலைத்து நிற்பதால், விவசாயிகள் சவுக்கு பயிரிட்டுள்ளனர்.
இந்த சவுக்கு பயிர் அறுவடை காலம் வந்ததும், தனி நபர்களான வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்ற நிலை உள்ளது. இவர்கள், சவுக்குத் தோப்பை பார்வையிட்டு, ஏக்கர் கணக்கில் விலைபேசி வாங்குகின்றனர். ஏக்கருக்கு 30 முதல் 40 டன்கள் வரை சவுக்கு விளையும். அரசுத் தரப்பில் நேரடி கொள்முதல் ஏதும் இல்லை.
வேர் முதல் உச்சி வரை பலன் தரும் பயிர்: மொத்தமாக விலைபேசி வாங்கும் வியாபாரிகள், சவுக்கு மரத்தை வெட்டி, அதை சவுக்கு கம்பங்கள், சவுக்கு கட்டைகள், வேர் கட்டைகள், சவுக்கு மிளார்கள் என தனித் தனியாகப் பிரித்து ஈரோடு, பவானி, திருச்சி போன்ற ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகின்றனர்.
12 அடி முதல் 16 அடி வரையுள்ள சவுக்கு கம்பங்கள் கட்டடம் கட்டுவதற்கு தாங்கிகளாகவும், கம்பங்கள் மற்றும் கட்டைகள் காகித உற்பத்திக்கும் (பேப்பர் மில்களுக்கு), வேர்கட்டைகள் பாய்லருக்கு விறகுகளாகவும், எஞ்சியுள்ள மிளார்கள் சூளைகளுக்கு எறியூட்டவும் பயன்படுகின்றன.
ஏற்கெனவே சவுக்கு கம்பங்கள் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டதால், நல்ல விலை கிடைத்து வந்தது. நாளடைவில் கட்டடங்கள் கட்டுவதற்கு இரும்பு தளவாடப் பொருள்கள் வந்ததால், சவுக்கு கம்பங்களுக்கான தேவை குறைந்தது. இதனால், வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது குறைந்து போனது. இதன் காரணமாக, காகித தொழிற்சாலைகள், தொழிற்சாலை பாய்லர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு எடுக்கப்படுவதால், கடந்த 10 ஆண்டுகளாக சவுக்குக்கான விலை சரிந்துவிட்டது.
ஏற்கெனவே, சவுக்கு கம்பங்கள் டன் ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை விற்றன. கட்டைகள் ரூ.4 ஆயிரம் வரைக்கும் வேர் கட்டைகள் ரூ.3 ஆயிரம் வரைக்கும் விலைபோயின. தற்போது, இவை பாதி விலையாக குறைந்துவிட்டன. சவுக்கு நாற்று முதல் உழவு, உரம், ஆள் கூலி என சாகுபடிக்கான செலவினங்கள் பன்மடங்கான நிலையில், சவுக்குக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். விளை நிலங்களை விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே பலர் சவுக்கு சாகுபடி செய்து வருகின்றனர். இதை நம்பியிருந்த சவுக்கு வெட்டும், ஏற்றும் தொழிலாளர்களும் மாற்றுப் பணிக்கு திரும்பியுள்ளனர்.
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் சவுக்கு சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு பயிரிடப்படும் சவுக்கு பயிர்கள், அறுவடை செய்து ஈரோடு, பவானி, சேலம், திருச்சி பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. தனியார் மற்றும் அரசின் காகிதத் தொழிற்சாலைகளும் (பேப்பர் மில்) அங்கே தான் உள்ளன.
ஆனால், சாகுபடி செய்யப்படும் வடமாவட்டங்களில் அதற்கான காகித தொழிற்சாலைகள் இல்லை. கொள்முதலும் நேரடியாக இல்லையென விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
மேலும், சவுக்கு கம்பங்கள், கட்டைகளை தொழிற்சாலைகளுக்கு ஏற்றிச் செல்வதன் மூலம் லாரி போக்குவரத்துத் தொழிலும் சிறப்புடன் இருந்து வந்த நிலையில், தற்போது அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களும் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர்.
இது தொடர்பாக விவசாயப் பிரதிநிதிகள், அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவே, நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் பதில் வந்துகொண்டுள்ளது. ஆனால், இந்த சவுக்கு விவசாயத்தை மேம்படுத்தினால், மிகுதியான காகிதங்களை உற்பத்தி செய்யலாம் என்பதை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே விந்தையாக உள்ளது.
-இல.அன்பரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.