

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் அதை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்,
"காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் நலனைக் காக்கவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் அடங்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். அந்தவகையில், காவிரி டெல்டா பகுதியைப் பாதுக்காக சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதைச் செயல்படுத்திட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்காக தனிச் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.