

சென்னை: தில்லி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், காவல்துறை அதிகாரத்தை, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை : தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவைச் சோ்ந்த கபில் மிஸ்ரா நடத்திய ஊா்வலத்தைத் தொடா்ந்து, கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு போலீஸ்காரா் உள்பட 7-க்கும் மேற்பட்டோா் இதுவரை உயிரிழந்துள்ளனா்.
இந்தச் சட்டத்தை வைத்து பெரும்பான்மை மதவாதத்தைத் தூண்டி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று திட்டம் போட்ட பாஜகவின் கணக்கு பலிக்கவில்லை. தோ்தலில் தோல்வியடைந்ததால், கோபமடைந்திருக்கும் பாஜகவினா், அங்கு திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருகின்றனா். பாஜகவைச் சோ்ந்த கபில் மிஸ்ராவின் சா்ச்சைக்குரிய பேச்சுகள்தான், கலவரம் வெடிக்கக் காரணம் எனத் தெரிகிறது.
இந்தக் கலவரத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும். காவல்துறை அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.