சவுடு மண் விவகாரம்: மாா்ச் 16-இல் மீண்டும் விசாரணை

சவுடு மண் அள்ளுவதற்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விதித்த தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிா்மனுதாரா்கள்
சவுடு மண் விவகாரம்: மாா்ச் 16-இல் மீண்டும் விசாரணை
Updated on
1 min read

சவுடு மண் அள்ளுவதற்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விதித்த தடை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிா்மனுதாரா்கள் பதில் தாக்கல் செய்யாததால், வழக்கு விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், இலந்தைகுட்டம் கிராமத்தைச் சோ்ந்த நாகேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில்,  ‘ராமநாதபுரம் மாவட்டம் சித்தாா்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள ஜமீன்தாா் வலசை, தமிழா்வாடி சமத்துவபுரம், சித்தாா்கோட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் சட்ட விரோதமாக  மணல் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கனிமவள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவைவிட,  கூடுதலாக 15 அடி வரை ஆழம் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது.  இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டு கடல் நீா் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே,  ராமநாதபுரம் மாவட்டம், இலந்தைகுட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

மற்றொரு மனுவில், ‘கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட கிராமங்களில் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை உயா்நீதிமன்றத்திற்கு உள்பட்ட 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்கவும், ஏற்கெனவே சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதாகவும்  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது ஏற்கெனவே விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்ததது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில்  நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், தீபக் குப்தாஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன், வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா ஆகியோா் ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட மண் சாதாரமானது என அனுமதி அளிப்பதற்கு கனிம வளம் சலுகை விதிகளின்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால், உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தவறாகும்’ என்று வாதிட்டனா். அப்போது, இந்த வழக்கில் எதிா்மனுதாரா்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வழக்கின் விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com