

வேதாரண்யம்: பணம் இல்லாத தோழர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தன்னதனியே சென்று வாக்கு சேகரித்ததும்,அவருக்கு உதவிகள் செய்ததோடு வாக்களித்து வெற்றியும் பெறச் செய்த கிராமத்தினரின் நிலைப்பாடு சமூக ஆர்வலர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
பொதுவாக தேர்தல் என்றாலே பல இடங்களில் பணம் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருவதை மறுக்க முடியாது.ஆனால்,நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் பணம் செலவு செய்யாமல், விளம்பரம், ஊர்வலம் , ஆடம்பரங்கள் இல்லாது அதுவும் தன்னந்தனியே வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு கேட்டதும், அவரையேயே ஊர்மக்கள் ஆதரித்து ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
.நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கடிநெல்வயல் ஊராட்சி.இந்த ஊராட்சி மன்றத்துக்கான தலைவர் தேர்தலில் (தனி) மூனறு பேர் போட்டியிட்ட நிலையில் கே.வைத்திலிங்கம் (59) ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
கடிநெல்வயல் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கு.வைத்திலிங்கம்(59).1978-ல் பழைய எஸ்.எஸ்.எல்.சி முடித்த இவர்,குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாமலும்,வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல் இல்லாமலும் போனது.15 வயதாக இருக்கும்போதே தாயை இழந்தவர்,அடுத்தடுத்த ஆண்டுகளில் தம்பியையும் இழந்துள்ளார்.
குடும்பப் பொறுப்புகளை சுமந்த இவருக்கு உப்பு உற்பத்தியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு அண்மை ஆண்டுகளாக இந்த வேலையும் கேள்விக்குறியானது. கம்யூனிஸத்தின் மீது ஈர்க்கப்பட்ட இவர், அந்தக் கட்சியில் கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக இருந்து நிர்வாகக்குழு உறுப்பினராகவும், கிளைச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது அந்த அமைப்பின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறார். அத்துடன் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடிநெல்வயல் ஊராட்சின் துணைத் தலைவராக ஒருமுறை பணியாற்றியுள்ளார்.
திருமணம் செய்துக்கொண்ட வைத்திலிங்கத்துக்கு குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில்,அவரது மனைவியும் காலமாகி விட்ட நிலையில், தற்போது தனித்தே வாழ்ந்து வருகிறார். வங்கிக் கடனுக்காக சொந்த வீட்டை இழந்து விட்ட அவர், தற்போது சாலையோரத்தில் அமைந்துள்ள சிறிய கூரை வீட்டில் மாதம் ரூ.500 வாடகை செலுத்தி குடியிருந்து வருகிறார். ஏழையோடு போராடினாலும், கிராமத்து மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகள், முதியோர் உதவி போன்ற அரசு திட்டங்களை கிடைக்க தன்னால் இயன்றதை தொடர்ச்சியாக செய்வதை சேவையாகவே செய்து வருகிறார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மனுத்தாக்கலின்போது மட்டும் முன்மொழிந்த வரை துணைக்கு அழைத்துச் சென்ற இவர், மற்ற நாள்களில் வழக்கமாக உடுத்திக்கொள்ளும் உடைகளோடு தன்னந்தனி ஆளாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வது தனது சின்னமான கை உருளைக்கு வாக்கு கேட்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.
எவ்வித பரபரப்பும் இல்லாது வேண்டுகோள் அடங்கிய துண்டுப் பிரசுரத்துடன் மட்டுமே வாக்கு கேட்ட நாள்களில் ஆதரவாளர்கள் வீடுகளில் சாப்பாடு, தேநீர் கிடைத்ததோடு, உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் வாழ்த்து கூறி தங்களால் இயன்ற தொகையையும் அவருக்கு செலவுக்காக வழங்கியுள்ளனர்.
இது குறித்து கூறிய வைத்திலிங்கம், 'எனக்கென சொந்தமான வாழ்க்கை இல்லை. எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு என்னால் இயன்றதை செய்வேன்.என்னை வேட்பாளராக நிறுத்தியதும், வெற்றி பெற வைத்ததும் எனது கிராமத்து மக்கள்தான்.என்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாதிப்பில்லாமல் நேர்மையாகவும், ஊழல், முறைகேடு இல்லாத நிர்வாகத்தை செய்வேன்.அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்,எனக்கு ஆலோசகர்கள் வாக்காளர்கள் அவர்கள் வரும்பும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் உழைப்பேன் என்றார்.
அழுக்கேறிய சில வேட்டி சட்டைகள், 2 பிளாஸ்டிக் குடங்கள், எவர்சில்வர் பாத்திரங்களோடு காணப்படும் வாடகை கூரை வீட்டில் இப்போது பக்கத்து வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட சில நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
தோழர் என்ற சொல்லோடு அவரது ஆதரவாளர்கள் சென்று கை கொடுப்பதும், வாழ்த்து கூறுவதும் போது கிடைக்கும் மகிழ்ச்சிதான் எனது வாழ்நாளில் தான் செய்த பொது வாழ்வில் கிடைத்த மக்களின் அங்கீகாரம் என்பதை பெருமையாகக் கூறுகிறார் இவர்.
ஜனநாயகத்தை பணநாயகம் தீர்மானிக்கும் தற்போதய சூழலிலும் உண்மையான மக்கள் பணியாளரை தேர்வு செய்த கடிநெல்வயல் வாக்காளர்களின் பணியும்,கொண்ட கொள்கைக்கு பாதகம் இல்லாது மக்கள் பணியாற்றும் தோழரின் செயல்பாடுகள் சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.