81 வருட பாரம்பரியமிக்க தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை

உலக அளவில் சிறப்புபெற்றதும், 81 வருட பாரம்பரியமிக்கதுமான தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு சான்றிதழை விரைவில் மத்திய அரசு வழங்கிட மரச்சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
81 வருட பாரம்பரியமிக்க தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை
81 வருட பாரம்பரியமிக்க தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை

உலக அளவில் சிறப்புபெற்றதும், 81 வருட பாரம்பரியமிக்கதுமான தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு, தமிழகத்தின் 36வது பொருளாக, மத்திய அரசு புவிசார் குறியீடு சான்றிதழை விரைவில் மத்திய அரசு வழங்கிட தம்மம்பட்டி மரச்சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்மம்பட்டி மரச்சிற்பங்களின் பாரம்பரியம் குறித்து ஒரு கண்ணோட்டம்:

சேலம் மாவட்டத்திலேயே மரச்சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மையமாக விளங்கி வருவது தம்மம்பட்டி மரச்சிற்பங்கள்தான். தம்மம்பட்டி பேரூராட்சியில் காந்தி நகர் என்ற பகுதியில் ஓட்டர் சமுதாய மக்கள், பரம்பரை பரம்பரையாக சுமார் 22-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் மரச்சிற்பங்கள் செய்யும் தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்து வருகின்றனர். மரச்சிற்பங்கள் பொதுவாக தூங்குவாகை, அத்தி, மாவிலிங்கம், வேங்கை உள்ளிட்ட மரங்களில்தான் செய்யப்படுகிறது. இதில் கடவுள் சிலைகள் வேங்கை மரங்களில் மட்டும் செய்யப்படுகிறது. இந்த வகை மரங்களை திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தமாக தம்மம்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்குள்ள மரச்சிற்பிகள் கோவில் வேலைப்பாடுகள், தேர்கள், விலையுயர்ந்த சிறு ரதங்கள், டிசைன் வேலைகளையும், லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன், விநாயகர், புத்தர், வெங்கடாஜலபதி, முருகன், யானைகள், சிவன் ராமர்பாதம் உள்ளிட்ட சிலைகள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டினருக்கு அவர்கள் விரும்பும் வகையிலான மரச்சிலைகள், தேர்வேலைகள், ஷோகேஸ்களில் வைக்கப்படும் கலைநயமிக்க மரச்சிற்பங்களை செய்யும் பணிகளில் வருடம் முழுவதும் மும்முரமாய் ஈடுபட்டு வருவது இவர்களின் தனிச்சிறப்பு.

கரோனா ஊரடங்கு காலத்திலும், இவர்களது வீடுகளில், மரச்சிற்பங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தம்மம்பட்டி, அரும்பாவூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மட்டும்தான் அதிகளவிலும், சிறப்பாகவும் மரச்சிற்பங்கள் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

திருச்சி, சேலம், கோவை, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் நடைபெறும் கோவில்களின் மரவேலைப்பாடுகளை அங்கேயே சென்று தங்கி வருடக்கணக்கில் செய்து தருகின்றனர். இங்கிருந்து மரச்சிலைகள் மும்பை, தில்லி, குஜராத், கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு தம்மம்பட்டி மரச்சிலைகள் விற்பனைக்காக தம்மம்பட்டி மரச்சிற்பிகள் எடுத்துச்செல்கின்றனர்.

இங்குள்ள மரச்சிற்பங்கள், இலங்கை, மியான்மர், மாலத்தீவு, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு நல்ல வரவேற்புள்ளதால், ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இச்சிற்பங்களை செய்வதற்கென்று தனி உளி, சுத்தியியல், இழைப்பு உளி, செதுக்குஉளி போன்றவைகளை பயன்படுத்தப்படுகிறது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலகட்டத்தில் 7 வருடங்கள் செய்யப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 18 அடி உயர தேர், தம்மம்பட்டி மரச்சிற்பிகளால் செய்யப்பட்டது. தமிழகத்தில் எந்த தேரிலும் இல்லாத சிறப்பம்சமாக இத்தேரில் காந்திஜியின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பங்களுக்கு புவிசார்குறியீடு பெறவேண்டும் என்பது எல்லோரது விருப்பம். புவிசார்குறியீடு என்பது ஒரு பொருளுக்கு தரத்தையும், மதிப்பையும், உலகளவில் அங்கீகரிப்பது. அக்குறியீடு கிடைத்துவிட்டால், அப்பொருளைப்போல் யாரும் மாதிரி எடுக்க முடியாது.

புவிசார் குறீயீடு பெறுவதற்கு, இப்பகுதி மரச்சிற்பிகளின் பிரதிநிதிகளாக செயல்பட்ட தம்மம்பட்டி சில்ப கிராமம் அமைப்பின் தலைவர் செங்கோட்டுவேல் மற்றும் சிற்பி சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:

தம்மம்பட்டியில் உள்ள சிறந்த,மூத்த சிற்பிகளான சந்திரன்(74), பழனியாண்டி(73), பொன்னுசாமி(70) ஆகியோருக்கு கைவினைப் பொருட்களுக்குரிய உயர்ந்த விருதான வாழும் பொக்கிஷம் விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும் செங்கோட்டுவேல், துரைராஜ், எம்.ராஜீ,சந்திரன், பொன்.ரவி ஆகியோர் மாநில அரசு விருதினை பெற்றுள்ளனர். தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் விரைவில் வழங்கிட வேண்டும் என்று கூறினர்.

வாழும்பொக்கிஷம் விருது பெற்ற சிற்பி பொன்னுசாமி(70), இங்குள்ள மரச்சிற்பங்களை, மத்திய, மாநில அரசுகள் நேரிடையாக எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும். அதுவே எங்களது பிரதான கோரிக்கையாகும் என்றார்.

தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்காக,தமிழ்நாடு கைவினைஞர்கள் மேம்பாட்டுக்கழகம் (பூம்புகார்) 2013ல் மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரியமிக்க கைவினைப்பொருட்களை புவிசார் குறியீட்டு பதிவகத்தில் பதிவு செய்ய, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகம் (பூம்புகார் நிறுவனம்) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தியை 2013ல் நியமித்தது. மேலும் அவர் தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீட்டு பதிவுப் பொருட்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

இதுவரை தமிழகம் இதுவரைபெற்ற 35 பொருட்களில், 24 பொருட்களுக்கு, புவிசார்குறியீடு பெற்றுத்தந்த ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்காந்தி கூறியதாவது:

தம்மம்பட்டி மரவேலைப்பாடிற்கு புவிசார் குறியீடு கேட்டு, விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் அரசிதழில் 29.2.2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த விண்ணப்பம் பூம்புகார் சார்பில் 2013-ல் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு நாளிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்கள் முடிந்த உடனே அவ்விண்ணப்பம் புவிசார்குறியீடு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று சட்டப்படி அறிவிக்கப்படும்.

ஆனால் அந்த 4 மாதங்களில் எவ்வித ஆட்சேபணையும் இல்லாமல் இருக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்திற்கு கடந்த 4 மாதங்களில் எவ்வித ஆட்சேபணையும் இதுவரை இல்லை. ஆனால் இன்று வரை தம்மம்பட்டி மரவேலைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டது என்றோ அல்லது புவிசார் குறியீட்டிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றோ புவிசார் குறியீடு அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்படவில்லை. வேறு எதுவும் இடையூறு இல்லாத சமயத்தில் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு விரைவில் புவிசார்குறியீடு சான்றிதழ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

கரோனாவால் தாமதமாகும் புவிசார்குறியீடு சான்றிதழ் வெகுவிரைவில் கிடைத்தால், உலக அளவில் தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் புகழ்பெறும் என்பது உறுதி. தம்மம்பட்டி மரச்சிற்பிகளின் பட்டப்படிப்பு படித்த அடுத்த தலைமுறையும் மரச்சிற்பங்களை வடிவமைத்தில் ஈடுபட்டுவருவது, இத்தொழிலின் வரப்பிரசாதம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com