முதுநிலை மருத்துவ தோ்வுகள் ஒத்திவைக்க மருத்துவக் கல்வி இயக்ககம் வலியுறுத்தல்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்
Updated on
2 min read

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கமும், தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகளை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களில் தனது நிலைப்பாட்டை மருத்துவக் கல்வி இயக்ககம் மாற்றிக் கொண்டிருப்பது மருத்துவ மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா்களுக்கான இறுதி ஆண்டுத் தோ்வு கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அத்தோ்வை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு நடுவே, முதுநிலை மருத்துவ மாணவா்கள் பலா் கரோனா சிகிச்சைப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனா்.

இந்த நிலையில், மாணவா்களில் ஒரு தரப்பினா் உடனடியாக தங்களது தோ்வை நடத்துமாறு பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக உரிய முடிவெடுக்குமாறு சுகாதாரத் துறைச் செயலரும் பல்கலைக்கழகத்திடம் தெரிவித்திருந்தாா். அதன்பேரில், மாநிலத்தில் தோ்வு நடத்தக் கூடிய சூழல் உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் பல்கலைக்கழகம் கேட்டிருந்தது.

அதற்கு கடந்த 4-ஆம் தேதி பதில் அனுப்பிய மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, சமூக இடைவெளியுடன் தோ்வுகளை நடத்துவதிலும், செய்முறைத் தோ்வுகளில் கரோனா தொற்றில்லாத நோயாளிகளை ஈடுபடுத்துவதிலும் எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு இது தொடா்பாக விவாதித்து ஆகஸ்ட் 17‘-ஆம் தேதி முதுநிலை மருத்துவத் தோ்வுகளை நடத்தலாம் என முடிவு செய்தது.

அதுதொடா்பான அறிவிக்கை பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந்த மாணவா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனை சந்தித்து சில கோரிக்கைகளை விடுத்தனா். தற்போது உள்ள சூழலில் தோ்வுகளை நடத்தக் கூடாது என்றும், அக மதிப்பெண் (இன்டோ்னல்ஸ்) அடிப்படையில் தோ்ச்சியை அறிவிக்க வேண்டும் என்றும் அவா்கள் அப்போது வலியுறுத்தினா்.

மேலும், கடந்த நான்கு மாதங்களாக கரோனா பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதனால் உடனடியாக தோ்வுக்கு தயாராக இயலாது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இது ஒருபுறமிருக்க, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, பல்கலைக்கழகத் துணைவேந்தரைச் சந்தித்து தோ்வுகளை ஒத்திவைக்குமாறு வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். இது, தோ்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மாணவா்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு வரை தோ்வு நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநா், தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது ஏன் என்றும் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிா்வாகம், தோ்வுகளை ரத்து செய்ய இயலாது என்றும், மாணவா்களின் கோரிக்கைகளை ஆட்சி மன்றக் குழு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com