கூத்தாநல்லூர்: கரோனா எதிர்ப்புச் சக்திக்கான மருத்துவம்; யுனானி உதவி மருத்துவ அலுவலர் தகவல்

கரோனா எதிர்ப்புச் சக்திக்கான மருத்துவம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை யுனானி மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.
கூத்தாநல்லூர் யுனானி உதவி மருத்துவ அலுவலர் சபியுல்லாஹ்
கூத்தாநல்லூர் யுனானி உதவி மருத்துவ அலுவலர் சபியுல்லாஹ்
Published on
Updated on
1 min read

கரோனா எதிர்ப்புச் சக்திக்கான மருத்துவம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை யுனானி மருத்துவத்தில் வழங்கப்படுகிறது என யுனானி உதவி மருத்துவ அலுவலர் சபியுல்லாஹ் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியது..

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை யுனானி மருத்துவம் பல ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கரோனா தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்று உடலின் நோய் எதிர்ப்பு திறனை பாதுக்காக்க மற்றும் அதிகரிக்க யுனானி பிரிவின் மருத்துவத்திலிருந்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

மூக்கில் சளியோ, அடைப்போ ஏற்பட்டிருந்தால், இரவு படுக்கும் முன்பு, இரண்டு சொட்டு நல்ல எண்ணெய்யை விட வேண்டும். சளியும் போகும். மூக்கின் அடைப்பும் திறந்து விடும். காய்ச்சிய பாலில் பூண்டு, சோம்பைச் சேர்த்துக் குடிக்க வேண்டும். பூண்டுப் பல்லை சுட்டும் சாப்பிடலாம். அனைத்து மருந்துகளையும் ஒரே நாளில் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு மருந்தைத்தான் பயன்படுத்த வேண்டும். 

தண்ணீரை கொதிக்க வைத்து, கீழே இறக்கி வைத்து அதில், ஒம வள்ளி இலையையும், ஆர்.எஸ்.பதி இலை என இரண்டையும் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். ஜலதோஷம் குணமாகி விடும். இவைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவைகளை வீட்டில் இருந்தபடி செய்யக் கூடியவைகள். கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை யுனானி பிரிவில், இதற்குரிய சிரப்பும், லேகியமும் வழங்கப்படுகிறது. கபசுர குடிநீர் பவுடரும் வழங்கப்படுகிறது. எந்த ஒரு மருத்துவ சிகிச்சைப் பார்த்தாலும், நோய் எதிர்ப்பு சக்திக்கான சிகிச்சையைத்தான் பார்க்க முடியும். 

கரோனா தொற்றுக்கு என எதிர்ப்பு சக்தி மருத்துவம் என்பது தனியாக கிடையாது. தற்போதைய கரோனா காலத்தில், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்குத்தான் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். அதற்குத்தான் மருத்துவம் பார்க்க வேண்டும். வீட்டில் வயதானவர்களுக்கு பால் கொடுக்கும் போது, அதில், சுக்கு, மஞ்சள் என ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பாக்கெட் மஞ்சள் தூளையோ, மிளகுத் தூளையோ பயன்படுத்தக் கூடாது. 

மஞ்சள், மிளகு, இஞ்சி என வீட்டிலேயே இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 200 மில்லி பாலுக்கு, 10 மில்லி அளவுதான் கலக்க வேண்டும். அதிக அளவில் கலக்கக்கூடாது. பாதாம், பிஸ்தா, திராட்சை என உலர்ந்தவைகளைச் சாப்பிடலாம். உலர்ந்த பழவகைகளைச் சாப்பிடுவதால், கொலஸ்ட்ராலும், பி.பி.யையும் அதிகரிக்காமலும், குறைக்காமலும் சீராக வைத்து இருக்கும். 

ஆலி விதையில் சூப்பு வைத்தும் சாப்பிடலாம். மேலும், கரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க, முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடலில் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். நமது வீட்டைச் சுற்றி சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com