காமராசரின் சொத்துக்கள்

பதவியும், பணமும் தனக்கு வேண்டும் என எடுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு வழி விட்டவர். வாழ்நாள் முழுவதையும், சமூகத் தொண்டு செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராசர்.
காமராசர்
காமராசர்
Published on
Updated on
2 min read

பெருந்தலைவர் கர்ம வீரர் காமராசர், குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாளுக்கு, 1903 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 15-ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். அவரது இயற்பெயர் குலதெய்வத்தின் பெயரான காமாட்சி என்பதாகும்.

காமராசர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், 6 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் படிக்காத மேதையானார். படித்திருந்தால் கூட, இந்த அளவுக்கு மக்கள் மனதில் நிலைத்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. தனது மாமாவின் துணிக்கடையில் வாழ்க்கைப் படிப்பைத் தொடங்கினார்.

16 ஆம் வயதில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பொதுச் சேவை செய்யத் தொடங்கினார். தனக்காக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் தனது ஆயுள் முழுவதையும், நாட்டுக்காகவும், நாட்டு ம்க்களுக்காகவும் அர்ப்பணித்தவர் பெருந்தலைவர் காமராசர். 1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, முதன்முதலாக சிறைக்குச் சென்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, 9 ஆண்டுகள் தன்னுடைய இளம் வயதின் வாழ்க்கையை சிறையில் கழித்தவர் காமராசர்.

1952 ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் வெற்றியைப் பெற்றார். 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பெரும் செல்வாக்கைப் பெற்று பெருந்தலைவரானார். காமராசரின் 9-ஆம் ஆண்டு கால முதல்வர் ஆட்சியில், செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் தொலைநோக்குத்  திட்டங்களாகும். தனக்காக உழைக்காமல், மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற ஒரேத் தலைவர் கர்மவீரர் காமராசர்தான். மூன்று முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராசர், பதவியை விட தேசப்பணியையும், கட்சிப் பணியையுமே முக்கியம் எனக் கருதியவர். அதனால்தான், கே பிளான் என்ற காமராசர் திட்டத்தைக் கொண்டு வந்தார். அத்திட்டத்தின்படி, கட்சியின் மூத்தத் தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் எனக் கூறியது மட்டுமல்லாமல், தனது முதல்வர் பதவியைத் துறந்து, பதவி ஆசை இல்லாதவர் எனவும் நிரூபித்தவர் படிக்காத மேதை காமராசர். அதே ஆண்டில், அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1964 ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு இறப்புக்குப் பின், லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக முன் மொழிந்தார் காமராசர். தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்த்திரியின் மறைவுக்குப் பிறகு, நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமராக்கினார் காமராசர். இது போன்ற செயல்களால்தான் காமராசர் கிங் மேக்கர் எனப் புகழ் பெற்றார்.

மகத்தான மனிதரான காமராசரின் சொத்துக்கள் எனப் பார்த்தால், விசிட்டர்கள் வந்தால் உட்கார 4, 5 நாற்காலிகள், அவர் பயன்படுத்திய செருப்பு. அக்டோபர் 2 ஆம் தேதியைக் காட்டும் குமரன் காலண்டர், அவர் பயன்படுத்திய அலாரம். அவரது நூல் நிலையத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த விதவிதமான 1500 புத்தகங்கள். தாய் சிவகாமி அம்மையாரின் படம். ஜெயிலில் இருந்து திரும்பும் படங்கள். இரண்டு சூட்கேஸ்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த கதர் ஆடைகள், அவர் பயன்படுத்திய பேனாக்கள், கடைசியாக அவர் படித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா, துக்ளக் பத்திரிகைகள், மூக்குக் கண்ணாடி, சேவிங் ரேசர், பிரஸ், நூற்றுக்கணக்கான கத்திரிக்கோல்களும், குத்துக் கரண்டிகளும் இருந்தன. பெருந்தலைவர் திறப்பு விழா நடத்தவும், அடிக்கல் நாட்டவும் இவைகள்தான் பயன்படுத்தப்பட்டனவாம்.

காமராசரின் இந்தச் சொத்துக்கள் அனைத்தும், சென்னை தி.நகரிலுள்ள திருமலைப்பிள்ளை ரோட்டில், பளிச்செனத் தெரியும் வகையில் காவி நிறத்தில் உள்ள காமராசர் இல்லத்தில் காணலாம். 

பதவியும், பணமும் தனக்கு வேண்டும் என எடுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு வழி விட்டவர். வாழ்நாள் முழுவதையும், சமூகத் தொண்டு செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காமராசர், 1975 ஆம் ஆண்டு, தன்னுடைய மானசீகக் குருவான மகாத்மா காந்தி பிறந்த நாளான, அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, தனது 72 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது உடல் மறைந்தாலும், அவரது புகழும், செயலும், தொண்டும் இவ்வுலகம் இருக்கும் வரை மறையவே மறையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com