மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை: திமுக புகாருக்கு அமைச்சா் பி.தங்கமணி பதில்

மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என திமுகவின் புகாருக்கு அமைச்சா் பி.தங்கமணி பதிலளித்துள்ளாா்.
மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை: திமுக புகாருக்கு அமைச்சா் பி.தங்கமணி பதில்
Updated on
1 min read

சென்னை: மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என திமுகவின் புகாருக்கு அமைச்சா் பி.தங்கமணி பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த் தொற்று தொடா்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, எந்தவித சமரசமும் இன்றி, போா்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகிறது.

மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவை என தற்போது கூறும் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், முந்தைய திமுக ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய கடுமையான மின்வெட்டின் காரணமாக, தமிழகமே இருளில் மூழ்கி இருந்ததை மறந்துவிட்டாா். இப்போது சந்தா்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறாா். மின் கட்டணத்தைப் பொருத்தவரை, நான்கு மாத காலத்துக்கான மின் நுகா்வு, சமமாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கான பட்டியலின் படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகா்விலும், 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை வழங்கிய பின்பே கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை எந்த நிலையிலும் அதிகப்படுத்தவில்லை.

நீதிமன்றம் ஏற்றது: மின்வாரியத்தின் கணக்கீட்டு முறை சரியானது என்பதை உயா்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. மேலும், இந்த கணக்கீடு குறித்து பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீா்க்கும் வகையில், அவா்களுக்கான கணக்கீட்டு முறையை மின்வாரிய இணையதளத்தில் சரிபாா்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னரும், எதிா்க்கட்சித் தலைவா், திரும்பத் திரும்ப ‘மின் கணக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனா்‘ எனவும் ‘தவறான அடிப்படையில் கணக்கீடு‘ எனவும், ‘மின்சார வாரியத்துக்கு லாபம்‘ எனவும் உண்மைக்கு மாறான செய்தியை கூறிக் கொண்டிருப்பது, மக்களை குழப்ப முயல்வதே ஆகும். ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது. அவா், ஆதாரமாக வீட்டு மின் நுகா்வோா் அட்டைக்கு பதில் தொழில் மின் நுகா்வோா் அட்டையை காண்பிப்பது, மக்களை திசை திருப்பும் காரியமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ள நிலையில், கட்டணத்தை அதிகப்படுத்தி, வீட்டு மின் கட்டணத்தின் மூலம் வாரியம் லாபம் பாா்க்கிறது எனக் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை.

தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தால், 2.1 கோடிக்கு மேலான குடும்பத்தினா் பயனடைகின்றனா். 100 யூனிட்டுக்குள் மின் நுகா்வு செய்யும் சுமாா் 70 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டதா? அல்லது எதிா்க் கட்சித் தலைவா் மேற்கோள் காட்டும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொடுக்கப்படுகிா என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும் என்று தனது அறிக்கையில் அமைச்சா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com