இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

முளைக்கொட்டு திருவிழாக்கள் ரத்து: மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனை

கரோனா தொற்று எதிரொலி காரணமாக நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக்கலயம் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ...

News image

மானாமதுரையில் ஆடி முளைக்கொட்டு உற்சவத்துக்காக தயாரிக்கப்பட்ட முளைப்பாரிச் சட்டிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

Updated On :24 ஜூலை 2020, 5:13 am

வே.கருப்பைபா


மானாமதுரை: கரோனா தொற்று எதிரொலி காரணமாக நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக்கலயம் வைபவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்ப்டடுள்ள முளைப்பாரிச்சட்டிகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து  மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். 

மானாமதுரை பகுதியின் அடையாளமாக இருப்பது இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள்தான், மானாமதுரை மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்வதில் ஏராளமானோர் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர். 

இங்கு சமையல் பாத்திரங்கள், அடுப்பு, பானைகள், கூஜாக்கள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள் என பலவகை மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு தொழிலாளர்கள் நேரடியாகவும் மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். 

மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம் இந்தியா மட்டுமின்றி கடல் கடந்தும் வெளிநாடுகளில் மானாமதுரையின் பெருமையை ஒலித்து வருகிறது. மேலும் சீசனுக்கு தகுந்தவாறு இங்கு பல பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப் பகுதியில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மையே மானாமதுரை மண்பாண்டப் பொருள்கள் சிறப்புக்கு காரணமாகும். 

வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து மானாமதுரை வரும் மக்கள் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களை வாங்கிச் செல்ல தவறுவதில்லை. கரோனா தொற்று பிரச்சனை தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் மண்பாண்டப் பொருள்கள் விற்பனை என்பது முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் மானாமதுரையில் தொழிலாளர்கள் தயாரித்து வந்த பல மண்பாண்டப் பொருள்கள் விற்பனையாகாமல் கூட்டுறவு சங்கத்திலும் தொழிலாளர்களின் வீடுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொருள்களின் உற்பத்தியை குறைத்துள்ளனர். 

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே கிராமங்களிலும் நகரங்களிலும்  உள்ள கோவில்களில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைக்கொட்டு உற்சவம் கஞ்சிக்கலயம் வைபவங்கள்  களைகட்டத் தொடங்கி விடும். தற்போது கரோனா தொற்று பிரச்னை உள்ளதால் மக்கள் கூடுவதை தவிர்க்க திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோவில்கள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. 

Story image

விற்பனையாகாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கஞ்சிக்கலயங்கள்

கரோனா தொற்று பிரச்சனை கிராமங்களிலும் எதிரொலிப்பதால் கிராமப்புறங்களிலும் ஆடி முளைக்கொட்டு உற்சவம் நடத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதன் காரணமாக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண்ணால் தயாரிக்கப்பட்ட முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக்கலயங்களை வாங்கிச் செல்ல ஆள் இல்லாமல் அவை தேக்கமடைந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து மானாமதுரையில் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் ஊழியரான முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் நாகலிங்கம் என்ற ராஜா கூறியதாவது: கரோனா பிரச்னையால் மண்பாண்ட பொருள்கள் அனைத்தும் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்களும் தயாரிப்பு பொருள்களை குறைத்து விட்டனர். 

ஆடி மாதத்தில் கோவில்களில் நடக்கும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக்கலயம் வைபவம் போன்ற விழாக்களை நடத்தவும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதமே  பணியை தொடங்கி தயாரிக்கப்பட்டுள்ள முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ஆடி மாதம் பிறந்துவிட்டால் இங்கு வந்து முளைப்பாரிச்சட்டிகள், கஞ்சிக்கலயங்களை வாங்கிச் செல்வார்கள். ஆவணி மாதம் கடைசிவரை கூட முளைக்கொட்டு உற்சவங்கள் நடத்தப்படும். மக்கள் கூடுவதை தவிர்க்க கோவில் விழாக்கள் நடத்தப்படாததால் திருவிழா தொடர்பான மண்பாண்டப் பொருள்களும் விற்பனையாவது கிடையாது. 
இனி வரும் நாள்களில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி  கோவில்களை திறந்து விழாக்களை நடத்த அனுமதித்தால் மேற்கண்ட பொருள்கள் விற்பனையாவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கபடுமா என்பது தெரியாத நிலையில், இந்தாண்டு முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக்கலயங்கள் விற்பனையாவதற்கு வாய்ப்பில்லை என்றார். 

முதலீடு செய்து ஆடித் திருவிழாக்காக தயாரித்த மேற்கண்ட பொருள்கள் விற்பனையாகாமல்  உள்ளதால் மானாமதுரை பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.