தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது கண்டனத்துக்குரியது : அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது கண்டனத்துக்குரியது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கூத்தாநல்லூரில் நடைபெற்ற மருத்துவமுகாமில் கலந்து கொண்ட அமைச்சர் காமராஜ்
கூத்தாநல்லூரில் நடைபெற்ற மருத்துவமுகாமில் கலந்து கொண்ட அமைச்சர் காமராஜ்
Published on
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஏற்பாட்டில், கரோனா தடுப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அரசு மருத்துவமனை எதிரில் நடத்தப்பட்ட முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார், கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய நுகர்பொருள் வழங்கல் மற்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், “தமிழகத்தில் கரோனா தொற்று நோயை தடுப்பதற்காக முதல்வர் பழனிசாமி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கரோனா எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல், தொற்றுடன் வருகிறவர்கள் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இறப்பின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், இனி வரும் காலங்களில் குறைந்து விடும்.

அதற்குரிய நடவடிக்கைகளை  தொடர்ந்து முதல்வர் எடுத்து வருகிறார். கரோனா குறைவதற்கு, பொதுமக்கள்தான் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.” என்றார்.

தமிழகத்தில் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், “சமுதாயத்தில் பிரச்சனை வர வேண்டும் என்று செயல்படும் தீயசக்தி கொண்டவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துபவர்கள் கண்டனத்துக்குரியவர்கள். மத, இன உணர்வுகளை கேவலப்படுத்திப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.” என்றார்.

மேலும், “நேற்று ஜூலை 30 ஆம் தேதி வரை, 27 லட்சத்து 93 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால்  4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். அதுபோல, ரூ.5,483 கோடி வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சாதனை குறியீடுதான். டெல்டா மாவட்டம் அல்லாத மாவட்டங்களில், 457 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில், விவசாயிகள் கொண்டு வரும் எவ்வளவு நெல்லாக இருந்தாலும், அனைத்தையும் விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எந்த இடத்தில் திறக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகிறார்களோ, அந்த இடத்தில் மாவட்ட ஆட்சியரே திறந்து கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு 12 லட்சம் மெ.டன்னாக இருந்த கிடங்குகளின் கொள்ளளவு, 2020ல், 24 லட்சமாக உயர்த்துள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, களத்தில் வைத்து பயன்படுத்திக் கொள்வதற்காக,  உலர் களங்கள் 450 ல், 350 உலர் களங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. 100 உலர் களங்கள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

23 லட்சத்து 53 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு இருப்பு வைக்கப்படும் அளவுக்கு, இடம் உள்ளது. தற்போது, 9 லட்சம் மெ.டன்தான் கிடங்குகளில் உள்ளது. விவசாயிகளுக்குரிய பணமும் உடனே வங்கிகளில் போடப்படுகிறது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேடி வருகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

முகாம் ஏற்பாடுகளை, ஆணையர் ஆர்.லதா, சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com