பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சமணத் தீர்த்தங்கரர் சிற்பம்
சமணத் தீர்த்தங்கரர் சிற்பம்
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரிலிருந்து களிமேடு, கள்ளப்பெரம்பூர் வழியாக பூதலூர் செல்லும் சாலையில் பூதலூர் நான்கு சாலைக்கு ஒரு கி.மீ. முன்னதாக சாலையின் இடதுபுறத்திலுள்ள வயல்வெளிகளுக்கு இடையில் கன்னிமார் தோப்பு என்ற மேடான பகுதி உள்ளது. இதையொட்டி, விஷ்ணு மற்றும் சமணர், சப்தமாதர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான மணி மாறன் தெரிவித்தது:

விஷ்ணு சிற்பம்
விஷ்ணு சிற்பம்

பூதலூரைச் சேர்ந்த புத்தர் என்பவர் அளித்த தகவலின்பேரில் அப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டபோது அப்பகுதி ஆசிரியர்கள் ஜெயபால், இராமமூர்த்தி, நேரு, அரசு உள்ளிட்டோர் உடனிருந்து களப்பணிக்கு உதவி செய்தனர். அங்கே புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாட்டத்தில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய கிணறு (பட்டறைக் கிணறு) இருந்தது. இதுபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கிணறு அமைப்பு காண முடியாது. 

இந்த அமைப்பைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கைப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களால் இக்கிணறு வெட்டப்பட்டிருக்கலாம். இக்கிணற்றின் கரையில் சப்தமாதர் புடைப்புச் சிற்பம் மிகச்சிறிய அளவில் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இப்புடைப்புச் சிற்பம் பாதி மண்ணில் புதைந்து மறுபாதி மார்பிலிருந்து தலை வரை வெளியே தெரியுமாறு காணப்படுகிறது. இதன் சிற்ப அமைதியைக் காணும்போது கி.பி.10ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சார்ந்தவையாக அறிய முடிகிறது. இதிலிருந்து இப்பகுதியில் சிவாலயம் ஒன்று இருந்திருந்து முற்றிலுமாகச் சிதைந்து போயிருக்கலாம் எனக் கருத முடிகிறது.

பழங்காலக் கிணறு
பழங்காலக் கிணறு

இக்கிணற்றில் இருந்து மேற்கு திசையில் 150 அடி தொலைவில் மிக அழகிய 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஷ்ணு சிற்பம் இடுப்புக்குக் கீழே மண்ணில் புதையுண்ட நிலையில் இடுப்பிலிருந்து மேல்பாகம் வரை காண முடிகிறது. அழகிய புடைப்புச் சிற்பமாக மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கரத்தில் அபயம் காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு காணப்படுகிறது. இவரின் காது, கழுத்து, கை, இடுப்பு என அனைத்திலும் அணிகலன்கள் திகழ காணப்படுகிறார். 

இந்த விஷ்ணு சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வயல்வெளியில் வடமேற்காக 200 அடி தொலைவு சென்றால் ஒரு கால்வாயின் மதகை ஒட்டி சமணத் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் ஒன்று பீடம் வரை புதையுண்ட நிலையில் காண முடிந்தது. முக்குடையின்கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோல சமண தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் இப்பகுதியில் கண்டறியப்பெற்றதன் மூலம் இங்கே சமணம் தழைத்தோங்கியதை அறிய முடிகிறது.

இதிலிருந்து இப்பகுதியில் சிவாலயம், விஷ்ணு ஆலயம், சமணர் ஆலயம் போன்றவை இருந்திருக்கிறது எனக் கருதப்படுகிறது. மேலும், இப்பகுதியில் மிகப்பெரும் குடியிருப்பு சோழர் காலத்தில் இருந்ததற்கான சான்றாதாரங்களையும் காண முடிகிறது. உடைந்த ஏராளமான சோழர்கால கருப்பு, சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் அந்த வயல் வெளிப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. 

சப்தமாதர் புடைப்புச் சிற்பங்கள்
சப்தமாதர் புடைப்புச் சிற்பங்கள்

சற்றேறக்குறைய 1,200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில் வளவம்பட்டிக்கு அடுத்துள்ள சோத்துப்பாழை என்ற ஊரிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் இப்பகுதிக்கு வந்து குடியேறியதாகச் செவிவழிச் செய்தி வழங்கப்பட்டு வருகிறது. வளவம்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் சமண தீர்த்தங்கரரின் சிற்பம் இருக்கிறது. சோத்துப்பாழையில் இருந்து வில்வராயன்பட்டி பகுதிக்கு வந்து குடியேறிய இம்மக்கள் பின்னர் ஏழு கிளைகளாகப் பிரிந்து சித்திரக்குடி, ராயந்தூர், கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, கோவில்பத்து போன்ற பகுதிகளில் குடியேறி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு சமூகங்களைச் சார்ந்த இம்மக்களுக்கான குலதெய்வம் சந்திவீர ஐயன் மற்றும் பிள்ளைத்தாய்ச்சி அம்மன் எனப்படுகிறது. இந்த பிள்ளைத்தாய்ச்சி அம்மன் கோயில் சோத்துப்பாழை கிராமத்தில் இருக்கிறது. இன்றும்கூட பூதலூரை ஒட்டிய பகுதிகளில் வாழும் இம்மக்கள் புதுக்கோட்டை மாவட்டம், சோத்துப்பாழை சென்று தங்கள் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மட்டுமன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆடி மாதத்தில் ஆண்டுதோறும் திருவிழா எடுத்து நடத்துகின்றனர். தமிழர் மரபில் தாங்கள் எப்பகுதியிலிருந்து இன்றுள்ள பகுதிக்கு குடியேறினரோ அங்கிருந்து தங்களுடைய பூர்வீக பிறப்பிடத்தில் அமைந்த குலதெய்வத்தை வழிபட்டு வருவது மரபாகும் என்றார் மணி மாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com