
ஊதியூர் அருகே, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் குடிநீர்த் தொட்டிக்குள் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கயம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கயம் பகுதியில், ஊதியூர் அருகே கருக்கபாளையம் பிரிவு என்னும் இடம் அருகே, திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கி, அதை மனைகளாகப் பிரித்து விற்பனை செய்வதற்கு வேலை செய்துள்ளார். அதற்காக அங்கு மேல்நிலை தண்ணீர்த் தொட்டியும் கட்டியுள்ளார். இந்த மனைகள் ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதால், விற்பனை மந்தமாகவே இருந்து வந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பராமரிப்பு இல்லாமலும், மனித ஆள்கள் நடமாட்டமும் இருந்துள்ளது.
இந்த நிலையில், இங்கு கட்டப்பட்டிருந்த உயரமான தண்ணீர்த் தொட்டியில் மனித எலும்புக் கூடு ஒன்று கிடப்பதாக ஊதியூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின்பேரில், காங்கயம் டி.எஸ்.பி., தன்ராஜ், காங்கயம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர்த் தொட்டியில் மனித எலும்புக் கூடு உள்ளதை உறுதி செய்து, காங்கயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மனித எலும்பு கூட்டை கைப்பற்றி, கோவை மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீர்த் தொட்டியில் உள்ள மனித எலும்புக்கூடு அருகே, முயல் பிடிக்கப் பயன்படுத்தும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன. இதனால் கடந்த 3 அல்லது 4 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் முயல் பிடிப்பதற்கு வந்து, இந்த தொட்டி மீது ஏறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் அல்லது வேறு யாரேனும் கொலை செய்து சடலத்தை தொட்டியில் போட்டுள்ளனரா, வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெறும் மனித எலும்புக் கூடை சேகரித்து இத் தொட்டியில் போட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.