அறந்தாங்கி உள்ளிட்ட 23 இடங்களில் இணைய வழி போராட்டம்

அறந்தாங்கி உள்பட 23 கிளைகளில்  மாபெரும் இணையவழி போராட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி உள்ளிட்ட 23 இடங்களில் இணைய வழி போராட்டம்

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்கக் கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணைய வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (15/6/2019 திங்கட்கிழமை) அன்று  புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, ராஜேந்திரபுரம், கோட்டைபட்டினம், அம்மாபட்டினம், புதுப்பட்டினம், பாலப்பட்டினம், முத்துக்குடா ஆகிய 23 கிளைகளில்  மாபெரும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி  பங்கேற்றார்கள்.

வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காகச் சென்ற தமிழக மக்கள் பலர் கரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதால் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியாமல்  சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் உண்ண உணவின்றி,  இருக்க இடமின்றி சாலைகளில் படுத்துறங்கும் அவலம் இன்று வரை நீடித்து வருகின்றது.

தமிழக மக்களை மீட்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள தமிழக மக்கள் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க அவலக்குரல் எழுப்பும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதனைத் தொடர்ந்தே வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை மீட்கும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் இணையவழி போராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதியிலும் இந்த இணைய வழி போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி இணையவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். 

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் தங்களது வீடுகளின் வாசல்களிலும், மொட்டை மாடிகளிலும் நின்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்களின் தமிழக மக்களை மீட்கக்  குரல் கொடுத்துள்ளார்கள். காலை 10.45 முதல் 11 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, இணையம் வழியாக உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com