விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லவும், விமான நிலையத்துக்கு பயணிகளை அழைத்துச் செல்லவும், வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக 5-ஆவது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஜூன் 19 முதல் 30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளது. இதில், வாடகை வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில், பயணிகள் பயன்படுத்தும் வாடகை வாகனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத்தின் சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: தமிழக அரசிடம் உறுதி பெற்றதையடுத்து, விமானப் பயணிகள் வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த முழு பொதுமுடக்க காலத்தில், விமான நிலையத்துக்கு அழைத்து வரவும், விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லவும், பயணிகள் அனைத்து விதமான வாடகை வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதே நேரம், அதிகாரிகள் சோதனை செய்யும் போது, விமான பயணத்துக்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுட்டுரைப் பதிவை, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.