கூத்தாநல்லூர்: திறந்த வெளியில் விற்கும் உணவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் விற்கும் உணவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
கூத்தாநல்லூர்: திறந்த வெளியில் விற்கும் உணவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதிலும், நோய்கள் தொற்றாக மாறி பரவுவதிலும் பல வழிகள் உள்ளன. நோய்கள் வருவதில் எத்தனை வழிகள் இருந்தாலும், முதன்மையான, முக்கியமான வழியாகக் கருதப்படுவது நாம் உண்ணும் உணவு முறைகளால்தான் நோய்களே உருவாகிறது என்றால், மிகப் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையும் கூட. 

தற்போது, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் சீனாவில் உருவாகியுள்ள கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், எதிர்ப்புச் சக்தியான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் மருத்துவர்களும், அறிவு சார்ந்த வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர். இந்தக் காலத்தில், முக்கியமாக இந்தக் கரோனா காலத்திலும் 75,80,85 வயதுகளிலும் அந்தக் காலத்து முதியவர்கள் திடகாத்திரமாக வாழ்கிறார்கள் என்றால், அதற்கு 3 முக்கிய காரணங்கள் தான். நல்ல சத்தான உணவுகள், நல்ல உழைப்பு, நல்ல எண்ணம்.இவைகள் மூன்றும்தான் அந்தக் கால மனிதர்களுக்கு பெரும் மதிப்பு மிக்க சொத்தாக இருந்தன. தற்போது, உள்ள பெரும்பாலானவர்களிடத்தில் மேலே சொல்லப்பட்ட மூன்றும் கிடையாது என்றால் மிகையாகாது. முக்கியமாக உணவு முறைகள் முழுவதுமாக மாறிவிட்டன. புதிய, புதிய வகை, வகையான தினுசு தினுசான உணவுப் பண்டங்கள் வலம் வந்து, விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான உணவகங்களில் சுத்தம் என்பதையே மறந்து விட்டனர். டீ கடைகளில் கண்ணாடி கிளாஸ்களையும், சில்வர் டம்ளர்களையும் பார்த்தாலே தெரியும். சுத்தத்தின் லட்சணம். மேலும், கடைகளில் விற்கக்கூடிய வடை, போண்டா, சம்சா, பஜ்ஜி உள்ளிட்ட அனைத்துமே பெரும்பாலான கடைகளில் மூடப்படாமல் திறந்த வெளியில்தான் விற்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்களில் விற்கப்படும் வேர்க்கடலை, சோளம், பிளாச்சுழை உள்ளிட்ட அனைத்துமே திறந்த நிலையில்தான் காலம் காலமாக விற்கப்பட்டு வருகிறது. இது போன்று திறந்த வெளியில், சுத்தமில்லாமல், பாதுக்காப்பாற்ற நிலையில் விற்கப்படும் உணவுகளைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிடும் போது, பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இது போன்று திறந்த வெளியில், பாதுகாப்பில்லாத உணவுப் பண்டங்கள் விற்கப்படுவது. 

திருவாரூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களைப் பாதுகாக்க, தொற்று நோயிலிருந்து பாதுகாக்க, சுகாதாரத் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் கூறியது. திறந்த வெளியில் உணவுப் பண்டங்கள் விற்கப்படுவதை உடனே தவிர்க்க வேண்டும். அது போன்ற விற்கப்படும் உணவுப் பண்டங்கள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் விற்கப்படும் சுண்டல், பட்டாணி, கடலை போன்றவைகளை மூடி வைக்கப்பட்டு விற்கப்பட வேண்டும். கூத்தாநல்லூர் பகுதியில் தள்ளு வண்டியில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விற்பனையாளர்களுக்கு, பாதுகாப்புக்கான மூடியை எங்களது சங்கம் சார்பில் வழங்குகிறோம். அரசு உடனே பாதுகாப்பற்ற நிலையில் விற்கப்படுவதை, அந்தந்த நகராட்சி மூலம் தடுப்பதற்கும், சுகாதாரமாக விற்பதற்கும் ஆவண செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com