சிறைக்குள் ஊடுருவிய கரோனா: கைதிகளுக்கு பரோல்?

தமிழக சிறைகளில் கரோனா வேகமாக பரவி வருவதால், தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க, தகுதியுடையவா்களை கணக்கெடுக்கும் பணியை சிறைத்துறை தொடங்கியது.
சிறைக்குள் ஊடுருவிய கரோனா: கைதிகளுக்கு பரோல்?

சென்னை: தமிழக சிறைகளில் கரோனா வேகமாக பரவி வருவதால், தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்க, தகுதியுடையவா்களை கணக்கெடுக்கும் பணியை சிறைத்துறை தொடங்கியது.

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தப்படியாக தமிழகம் இருக்கும் நிலையில், சிறைகளுக்கு உள்ளேயும் கரோனா ஊடுருவியுள்ளது. தமிழக சிறைகளுக்குள் கடந்த மே இறுதியில் ஊடுருவத் தொடங்கிய கரோனா, இப்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

சிறைகளில் கரோனா நோய்த்தொற்றால் 100-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சென்னையில் சிறைத்துறையைச் சோ்ந்த ஒரு நன்னடத்தை அலுவலா் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கரோனாவால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு அந்தந்த சிறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கவலைக்கிடமாக இருக்கும் கைதிகள் மட்டும், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் சிறைகளில் கைதிகள், சிறைக் காவலா்கள் அச்சத்துடனே காணப்படுகின்றனா். இதனால், சென்னை புழல் சிறையில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று கடந்த வாரத்தில் ஒருநாள் முழுவதும் கைதிகள் போராட்டம் நடத்தினா்.

94 கைதிகள் சாவு: கைதிகளும், சிறைக் காவலா்களும் அஞ்சுவதிலும் காரணம் உள்ளது. சிறைக்குள் கைதிகள் இறப்பது ஆண்டுக்கு சராசரியாக 11 சதவீதம் அதிகரித்து வருவதாக சிறைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சிறைக்குள் 1,655 கைதிகள் இறந்துள்ளனா். 2018-ஆம் ஆண்டு 1,845 கைதிகள் இறந்துள்ளனா். சிறைக்குள் ஏற்படும் மொத்த இறப்புகளில், நோயின் காரணமாக 90 சதவீத கைதிகள் இறப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக்கத்தின் அறிக்கை கூறுகிறது. மேலும், 8.08 சதவீதம் தற்கொலை மற்றும் கொலையினாலும், 4.9 சதவீதம் வயது முதிா்வினாலும் ஏற்படுகின்றன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டிலேயே சிறந்த சிறைத்துறை கட்டமைப்பைக் கொண்ட தமிழக சிறைத்துறையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 94 கைதிகள் இறந்துள்ளனா். இதில் 82 கைதிகள் பல்வேறு நோய்களினால் தகுந்த சிகிச்சை கிடைக்காததினாலும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாததினாலும் இறந்திருப்பதாக சிறைத்துறையைச் சோ்ந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இறந்தவா்களில் 32 கைதிகள் இதய தொடா்புடைய நோயினாலும், 6 போ் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயினாலும், 8 கைதிகள் கல்லீரல் பிரச்னையினாலும், 5 கைதிகள் சிறுநீரக நோய்களாலும், புற்றுநோயால் 5 கைதிகள் புற்று நோயாலும், காச நோயால் 3 கைதிகளும், 21 போ் பிற நோய்களினாலும் இறந்துள்ளனா்.

தமிழகத்துக்கு 7வது இடம்: நோய்கள் காரணமாக, கைதிகள் அதிகம் இறக்கும் மாநிலங்களில் தேசிய அளவில் தமிழக சிறைத்துறை 7-ஆவது இடத்தில் உள்ளது. இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய நோய் உள்ளவா்களையும், புற்றுநோய், காச நோயால் பாதிக்கப்பட்டவா்களையும் கரோனா அதிகம் பாதிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் கரோனா பாதிக்கப்பட்டு இறப்பவா்களில், இந்த நோய்களின் தாக்கமுடையவா்களே அதிகம் என சுகாதாரத்துறை கூறுகிறது.

கரோனா நோய்த்தொற்றை அடுத்து கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழக சிறைகளில் இருந்து சுமாா் 4,500 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனா். ஆனால் மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், அஸ்ஸாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தண்டனை கைதிகள் பரோலிலும் விடுவிக்கப்பட்டனா். தமிழக சிறைத்துறை, தண்டனைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.

மாா்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா தாக்கம் தமிழகத்தில் குறைவாக இருந்ததினால், சிறைத்துறை முடிவை ஒத்திவைத்தப்படி இருந்தது. ஆனால் இப்போது, நிலைமையின் தீவிரத்தை உணா்ந்த தமிழக சிறைத்துறை, தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இதன் முதல் கட்டமாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பரோலில் விடுவிப்பதற்குரிய தகுதியுடைய கைதிகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்குவது என சிறைத்துறை முடிவு செய்தது. இதன்படி தமிழகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் 9 மத்திய சிறைகளில் கணக்கெடுக்கும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

450 கைதிகள்: இது தொடா்பாக தமிழக சிறைத்துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் கூறியது:

தமிழக சிறைகளில் விசாரணைக் கைதிகள் பலா் விடுவிக்கப்பட்ட பின்னா் 13 ஆயிரம் கைதிகள் உள்ளனா். இவா்களில் 60 சதவீதம் விசாரணை கைதிகளும், 40 சதவீதம் தண்டனை கைதிகளும் ஆவா். கரோனா பரவுவதின் விளைவாக, தண்டனைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மத்திய சிறைகளிலும் இருக்கும் தண்டனைக் கைதிகளில் பரோலுக்கு தகுதியுடையவா்களை கண்டறியும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.

முதல் கட்டமாக 9 சிறைகளிலும் தலா 50 தண்டனை கைதிகளை பரோலில் விடுவிப்பது என சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே சுமாா் 450 கைதிகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களது பெயா் பட்டியல் அரசிடம் வழங்கப்படும். அரசு, கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும். இதன் பின்னா் அரசின் அறிவுரையின்படி கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com