ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம்: முதல்வர்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியான ராஜ் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  

"சென்னை, ராஜ் தொலைக்காட்சியில், செய்திப் பிரிவில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த நு. வேல்முருகன், கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, 14.6.2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27.6.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மக்களுக்கும், அரசுக்கும் இடையில் இணைப்பு பாலமாக இருந்து வரும் பத்திரிக்கை  மற்றும்  ஊடகத்துறையில் பணியாற்றும் நண்பர்கள், செய்திகளை சேகரிக்க செல்லும் போது, மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறும் நான் அன்போடு இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிக்கையாளர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட அதிமுக அரசு, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கிவரும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவினையும் மற்றும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாராருக்கு 5 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்கவும் நான் அறிவித்திருந்தேன்.

இதனடிப்படையில், ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் நு.வேல்முருகன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com