அரசுத் துறை பற்றி கமலுக்கு என்ன தெரியும்?: முதல்வர் பழனிசாமி

அரசுத் துறையைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும், அவருக்கு சினிமாதான் தெரியும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


அரசுத் துறையைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும், அவருக்கு சினிமாதான் தெரியும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அங்கு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது,  

"ராமநாதபுரம், விருதுநகர் என இரண்டு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சுகாதாரத் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும். அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்கிற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும். துறை வாரியாக தமிழகம் பல்வேறு தேசிய விருதுகளை வென்று வருகிறது. பல்வேறு துறைகளில் அதிக தேசிய விருதுகளைப் பெற்ற மாநிலம் தமிழகம்தான். அவர் சினிமாவில் இருப்பதால் அவருக்கு இது தெரியாது.

என்னுடைய பேரில் இதுவரை எந்த தொழிலையும் செய்யவில்லை. விவசாயம் மூலம் வரும் வருமானத்தைதான் காண்பிக்கிறேன். அதன்பிறகு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும்போது அதன் சம்பளம், பிறகு ஓய்வூதியம், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது அதன் சம்பளம், பிறகு அதற்கான ஓய்வூதியம். என்னுடைய பெயரில் இருந்து இவற்றைத் தவிர வேறு எந்த வருமானத்தையும் நான் காட்டவில்லை. இதிலிருந்தே நான் விவசாயி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் (என்பிஆர்) பொருத்தவரை, 2010-இல்தான் நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது.

திமுக கொண்டு வந்ததில் இருந்து மூன்று அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. 1. தாய் மொழி என்ன, 2. தாய், தந்தை பிறப்பிடம், 3. ஆதார் எண், குடும்ப அட்டை விவரம், வாக்காளர் அடையாள அட்டை இதன் ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டும் என கூறுகிறார்கள். அதையும் விருப்பப்பட்டால் மட்டுமே சமர்பித்தால்போதும் என மத்திய அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். இல்லையெனில் ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், அருகில் உள்ள தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் என்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்களோ அதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.

விலாசம் கொடுத்த அதிமுகவுக்கு துரோகம் இழைத்தால் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள்.

மாநிலங்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை முறைப்படி அறிவிக்கப்படவில்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்பதன் காரணமாக, மாநிலங்களவை உறுப்பினர் கேட்கப்படும். இதைக் கேட்பதற்கு உரிமை உண்டு. எங்களது தலைமைக் கழகம் முடிந்தால் இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com