
மணப்பாறை: கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் கடந்த பிப் 24-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த ஏழு நாட்களாக ஒவ்வொரு நாளிலும் பெரியகாண்டியம்மன் வீதி உலா நிகழ்வு நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர் – சங்கர் கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் நாள் திருவிழா வேடபரி நிகழ்ச்சி வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோவில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. சாம்புவான் காளை முரசு கொட்டி முன்னே செல்ல அதைத் தொடர்ந்து வீரப்பூர் ஜமீன்தார் கே.அசோக்குமார், பரம்பரை அறங்காவலர்கள் ஆர்.பொன்னழகேசன், சுதாகர்(எ) கே.சிவசுப்பிரமணி ரெங்கராஜா மற்றும் பட்டையதாரர்கள் வர பட்டியூர் கிராமங்களின் இளைஞர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் கோவிலுக்குள் ஓடி சென்று குதிரை வாகனத்தில் பொன்னரை வைத்து தூக்கி வந்தனர். அதைத் தொடர்ந்து யானை வாகனத்தின் பெரியகாண்டியம்மனும் வர, அணியாப்பூரில் உள்ள குதிரை கோவிலுக்கு பொன்னர் அம்பு போட சென்றார்.
ஆலயத்திடலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. பின் புதன்கிழமை மாலை மஞ்சள் நீராடுதல் விழாவுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவு பெறுகின்றது. வேடபரி திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேடபரி நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் விரிவாக செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.