
மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம் நீதிமன்றத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தகர்த்து மன்னிக்க முடியாத குற்றத்தை பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது.
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக பா.ஜ.க. அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் தவே கடுமையான விமர்சனத்தை செய்திருக்கிறார். ‘இந்த நியமனம் கடுமையான ஆட்சேபனைக்கு உரியது. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் இருந்தபோது செய்ததற்கெல்லாம் பலனாக இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் நீதிமன்றத்தின் சுதந்திரம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது” என்று மிக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இதைவிட வேறு கடுமையான விமர்சனத்தை வேறு எவரும் செய்ய முடியாது. எனவே, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை பெற்றிருக்கிற நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து ரஞ்சன் கோகோய் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அப்படி செய்யவில்லை எனில் நீதிமன்றத்தின் மாண்பு, சுதந்திரம் ஆகியவற்றிற்கு துடைக்க முடியாத களங்கத்தை செய்த குற்றச்சாட்டிற்கு அவர் ஆளாக நேரிடும் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.