அருகிவரும் சிட்டுக்குருவிகளைக் காக்கச் செயற்கைக் கூடுகள்

தஞ்சாவூரில், அருகி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்கச் செயற்கைக் கூடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் தன்னார்வலர்கள்.
அருகிவரும் சிட்டுக்குருவிகளைக் காக்கச் செயற்கைக் கூடுகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், அருகி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்கச் செயற்கைக் கூடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் தன்னார்வலர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காக்கையைப் போன்று சிட்டுக்குருவியும் நம் வீடுகளைச் சுற்றிப் பரவலாக வலம் வந்த பறவையாக இருந்தது. மனிதர்களுக்கு இணக்கமான பறவையாகக் கருதப்படும் சிட்டுக்குருவியால் மனித இனத்துக்கும் பல நன்மைகளும் இருக்கின்றன.

இந்தியாவில் எங்கும் காணப்படும் பறவையாக இருந்த சிட்டுக்குருவிகள் அனைத்துத் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளக் கூடியவை. எனவே, துப்புரவுப் பணியில் சிட்டுக்குருவிகள் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன.



தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உணவுக் குடுவை.

மேலும், சுற்றுச்சூழலில் பல்லுயிர்ப் பெருக்கத்துக்குச் சிறு பறவைகள் மிகவும் அவசியம். அவற்றில், சிட்டுக்குருவிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, மனிதனுக்குத் தீங்காக இருக்கக்கூடிய கம்பளிப் பூச்சி போன்ற சிறு பூச்சிகள், கரையான்கள் உள்ளிட்டவற்றை இவை தின்றுவிடும். நெற் பயிர் உள்ளிட்ட பயிர்களில் தீமை விளைவிக்கும் பூச்சிகளையும் உண்ணக் கூடியவை இந்தச் சிட்டுக்குருவிகள்.

தஞ்சாவூர் அண்ணா நகரில் உள்ள வீட்டில் சிட்டுக்குருவிக்காக வைக்கப்பட்டுள்ள உணவுக் குடுவை.

சிட்டுக்குருவிகளின் குஞ்சுகளுக்குச் சிறு பல்லிகள், சுண்டெலிகள் போன்றவை புரதச் சத்துகளாக இருக்கின்றன. எனவே, இவற்றையும் சிட்டுக்குருவிகள் கொத்திச் சென்று தனது குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகளைக் குறைப்பதில் சிட்டுக்குருவிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆனால், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிட்டுக்குருவிகள் அருகி வரும் பறவையினமாக மாறிவிட்டது. முன்பைப் போல குடியிருப்புப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளைக் காண முடிவதில்லை. குறிப்பாக, நகர்ப்புறங்களில் முற்றிலுமாகவே அருகிவிட்ட இனமாக மாறிவிட்டன சிட்டுக்குருவிகள்.

மரத்தில் செய்யப்பட்ட செயற்கைக் கூடுகள்.

வீடுகளைச் சுற்றி இருந்த மரம், செடிகள் அகற்றப்பட்டதே இதற்கு முக்கியமான காரணம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. இதேபோல சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவு கிடைக்கும் வாய்ப்பும் குறைந்துவிட்டது. வீடுகளில் முன்பெல்லாம் துளைகள், இடுக்குகள் வைத்து கட்டப்படும். அவற்றில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழும். இப்போது, அதுபோன்ற துளைகளும் இடுக்குகளும் வீடுகளில் வைக்கப்படுவதில்லை.

சிட்டுக்குருவியைப் பொருத்தவரை சமூகப் பறவைகள், கூட்டுக் குருவிகள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இவை ஓரிடத்தில் 40, 50 குருவிகள் என கூட்டமாகத்தான் வாழும். எனவே, சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பவர்கள் ஒரே இடத்தில் வலை விரித்து, ஒட்டுமொத்தமாகப் அவற்றைப் பிடிப்பதற்கு வாய்ப்பாக இருப்பதும் அந்த இனம் அருகி வருவதற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில ஆண்டுகளாகச் சிட்டுக்குருவிகளைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாகி வருகிறது. இதன் மூலம் சிலர் தங்களது வீடுகளில் செயற்கைக் கூடுகளை அமைத்துள்ளனர்.

தஞ்சாவூரில் தன்னார்வ அமைப்பான அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர் சிட்டுக்குருவிகளைக் காக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து அறக்கட்டளைத் தலைவர் ஆர். சதீஷ்குமார் தெரிவித்தது:

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீசிய கஜா புயலில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டதால், தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளைக் காக்க 100 செயற்கைக் கூடுகளை வைத்தோம். மேலும், 20 இடங்களில் சிறிய அளவில் நீர்க் குடுவைகளையும், உணவுக் கலன்களையும் அமைத்தோம். இவை, மண் சட்டியில் செய்து வைக்கப்பட்டதால், சிலர் கல் வீசி உடைத்துவிட்டனர்.

எனவே, உலகச் சிட்டுக்குருவி நாளையொட்டி (மார்ச் 20) மரத்தில் பெட்டி போன்று செய்து செயற்கைக் கூடு வைக்கப்படுகிறது. இந்த முறை மரப்பெட்டி வடிவில் கூடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, 200 இடங்களில் இந்தக் கூடு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சிட்டுக்குருவிகளைப் பராமரிக்க சாரண இயக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, இப்பள்ளியில் சில கூடுகளை வைக்க உள்ளோம். இதேபோல, தண்ணீர் மற்றும் உணவுக் கலன்களும் 25 இடங்களில் வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தஞ்சாவூர் அண்ணா நகரில் வீட்டு வாசலில் சிட்டுக்குருவிக்காக தொங்கவிடப்பட்டுள்ள நெற்குஞ்சம்.

நெற்குஞ்சம்

நம்முடன் எளிதாகப் பழக் கூடிய பறவைகளில் சிட்டுக்குருவிகளும் ஒன்று. என்றாலும், முதலில் நம்மிடம் பழகுவதற்கு அச்சப்படும். இதனால், கூடுகளை அமைத்தாலும், சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கான வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. எனவே, பாரம்பரிய முறைப்படி நெற்குஞ்சம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களில் ஒரு கொத்தை வீட்டு முன் தொங்கவிடுவர். அதில், குருவிகள் உட்கார்ந்து தானியங்களைச் சாப்பிடும். இப்போது, அறுவடை எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், அதுபோன்ற நெற்குஞ்சங்கள் கிடைப்பதில்லை. இதனால், அந்த வழக்கமும் இப்போது நடைமுறையில் இல்லை.

அந்தப் பாரம்பரியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக நெற்குஞ்சத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நெற்குஞ்சத்தை அமைத்து, அதன் அருகில் செயற்கைக் கூடையும், உணவுக் கலனையும் வைக்கவுள்ளோம். நெற்குஞ்சத்தை வைக்கும்போது, அதை எதிர்நோக்கி சாப்பிட வரும் சிட்டுக்குருவிக்கு அச்சம் குறைந்து நம்பிக்கை வரும். இதன் மூலம், செயற்கைக் கூட்டிலும் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது என்பதால், இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் என்றார் சதீஷ்குமார்.

ஒருபக்கம் எல்லாவிதத்திலும் புறக்கணித்து உயிர்த்திருக்கவே முடியாத  நெருக்கடிக்குள் தள்ளி, முற்றிலுமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் எப்பாடுபட்டேனும் அவற்றைக்  காக்க வேண்டும் என்பதில்  அக்கறையுடன் செயல்படுகிறார்கள் சிட்டுக்குருவி ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com