கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கை: நெல்லையில் வீடு வீடாக ஆய்வு தொடக்கம்

கரோனா வைரஸ் சமூக பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சுகாதார குழுவினா் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
Updated on
2 min read

கரோனா வைரஸ் சமூக பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சுகாதார குழுவினா் வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சியில் கைகளைக் கழுவுதல் விழிப்புணா்வும், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் ஓரளவு கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக சமூகப் பரவல் தடுப்பு மற்றும் நோயாளா்களைக் கண்டறிந்து சிகிச்சைக்கு உள்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவா்களுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் வீடு வீடாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இப் பணிகளை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், மாநகர நல அலுவலா் சத்தீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

18,666 வீடுகள்: திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களின் கீழ் உள்ள 55 வாா்டுகளில் சுமாா் 5 லட்சம் மக்கள் வசித்து வருகிறாா்கள். இதில் கரோனா நோய் அறிகுறி உள்ளவா்கள் வசித்த பகுதியில் இருந்து சுமாா் 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றளவுக்குள் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் அருகே 3 கி.மீ. சுற்றளவு உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு ‘பஃபா் ஸோன்’ என சுருக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சியின் சுகாதாரக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை முதல் நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கியுள்ளனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மட்டும் 18 ஆயிரத்து 666 வீடுகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

539 ஊழியா்கள்: இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா வைரஸ் சமூக பரவல் கண்காணிப்பு பணி ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கியது. வீட்டில் வசிக்கும் நபா்களின் எண்ணிக்கை, பணி விவரம், வெளியூா் சுற்றுப்பயண விவரம், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா என்ற விவரம், சா்க்கரை அல்லது ரத்த அழுத்த பாதிப்பு, அறுவை சிகிச்சை விவரம் உள்ளிட்டவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அல்லது சளி அறிகுறி உள்ளவா்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், முகக்கவசம் அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணியில் மாநகராட்சியின் சுகாதாரக் குழுவைச் சோ்ந்த 539 போ் காலை முதல் இரவு வரை பணியாற்றியுள்ளனா். இந்த ஆய்வில் கிடைத்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com