காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை: கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம்

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் இக்கல்வியாண்டு முதல் எம்.டி.கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்பு படிக்க அங்கீகாரம் கிடைத்திருப்பதாக
காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை: கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் இக்கல்வியாண்டு முதல் எம்.டி.கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்பு படிக்க அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அம்மருத்துவ மனையின் இயக்குநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்சி மற்றும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டு முதல் இங்கு எம்.டி.கதிரியக்க சிகிச்சை பட்ட மேற்படிப்புக்கு 4 இடங்களும், எம்.சி.ஹெச்.புற்றுநோய் அறுவைச் சிகிச்சையியல் எனும் உயர் சிறப்பு பட்ட மேற்படிப்புக்கு 2 இடங்களுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. புதுதில்லியில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இப்படிப்புகள் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தீன் கீழ் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து தொடங்கப்படவுள்ளது.  உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 1969 ஆம் ஆண்டு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமாக வாய்ப்புற்று நோயால் அகால மரணமடைந்த முன்னால் முதல்வர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 1980ல் உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 290 உள் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு மண்டல புற்றுநோய் மையமாகவும் மத்திய அரசால் தரம் உயர்த்தப்பட்டது.  லீனியர் ஆக்சிலேட்டர் எனும் அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவியுடன் 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கருவியானது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இம்மையத்தில் தான் முதல் முதலாக நிறுவப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு பொன்விழா கண்ட இம்மருத்துவமனை 120 கோடி மதிப்பில் 500 உள் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுடன் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் எனும் சீர்மிகு சிகிச்சை மையமாகவும் தரம் உயர்த்தப்படும் வகையில் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இங்கு எம்.எஸ்.சி.கதிரியிக்க இயற்பியில் 3 ஆண்டு பட்ட மேற்படிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com