
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி ஜமாஅத் சார்பில், ஏழை, எளியவர்களுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் புதன்கிழமை வழங்கினார்.
குடிதாங்கிச்சேரி மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற எளிய விழாவுக்கு, பொதக்குடி ஜமாஅத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக் கோட்டி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன், வட்டாட்சியர் தெய்வநாயகி, நகராட்சி ஆணையர் லதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி நிறுவனர் ப.முருகையன் வரவேற்றார்.
விழாவில், கரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, கூலித் தொழிலாளிகள் 35 குடும்பத்தினருக்கு, தலா ரூ.2000-த்திற்கான ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள, அத்தியாவசியப் பொருள்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வழங்கினார். அப்போது அவர் பேசியது..
கரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு கூத்தாநல்லூர், பொதக்குடி உள்ளிட்ட ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளில் ஏற்படாத இக்கட்டான சூழ்நிலையை கரோனா வைரஸ் உருவாக்கியுள்ளது.
நாம் அனைவரும் கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நம்முடைய அன்றாட செயல்களில் கட்டுப்பாட்டுடன் கூடிய, சில வழிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். எங்குச் சென்றாலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
திருவாரூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாகியுள்ளது. இதை அனைவரும் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று நோயிலிருந்து நாம், நமது குடும்பம், நமது சமூகம் என அனைத்தையும் காப்பாற்ற அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த .ஆனந்த் தெரிவித்தார்.
விழாவில் பொதக்குடி ஜமாஅத் செயலாளர் எம்.எம்.ரஃப்யுதீன், அத்திக்கடை ஜமாஅத் தலைவர் வி.எஸ்.ஏ. அ.அஷ்ரப் அலி, கூத்தாநல்லூர் ஜமாஅத் துணைச் செயலாளர் முகம்மது மைதீன், பி.எம்.டி.ஜெய்னுலாபுதீன், பி.எம். தாஜுதீன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம், ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.