
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சவடு மண் குவாரியிலிருந்து ஆற்று மணல் அள்ளி லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால், இப்பகுதியில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
திருப்புவனம் ஒன்றியம் கானூர் அருகேயுள்ள சடங்கி கிராமப் பகுதியில் வைகையாற்றை ஒட்டிய ஓடை அமைந்துள்ள தனியார் பட்டா நிலத்தில் சவடு மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சவடு மண் குவாரியில் 3 அடிக்கு கீழ் ஆற்று மணல் உள்ளது. குவாரியிலிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சவடு மண் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது விதிமுறைகளை மீறி ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தினமும் ஏராளமான லாரிகளில் மணல் அள்ளி விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கானூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் கூறியதாவது.
சடங்கியில் சவடு மண் குவாரிக்கு அனுமதி வாங்கியவர்கள் சவடுமண்ணுக்கு கீழே உள்ள ஆற்று மணலை ராட்ச பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அள்ளி பகல் நேரத்திலேயே டிப்பர் லாரிகளில் ஏற்றி விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர். துணிச்சலாக நடைபெறும் இந்த மணல் திருட்டை காவல்துறை நிர்வாகம், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சவடு மண் குவாரியில் 20 அடி ஆழம் தோண்டி ஆற்று மணலை அள்ளி வருகின்றனர். கானூர் பகுதியில் ஏராளமான குடிநீர் திட்டங்கள், விவசாய மோட்டார் கிணறுகள் உள்ளன.
கோடைக்காலத்தில் சவடு மண் குவாரியில் இவ்வாறு ஆற்று மணல் எடுப்பதால் குடிநீர் திட்டங்களுக்கும், விவசாய கிணறுகளிலும் நீராதாரம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் உடன் தலையிட்டு மேற்கண்ட சவடு மண் குவாரியிலிருந்து ஆற்று மணல் அள்ளப்படுவதைத் தடுத்து சவடு மண் குவாரியை நிறுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.