

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கு நீரை சேமிப்பது அணையின் இடது கரையில் அமைந்துள்ள உபரிநீர் போக்கியாகும். இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட இரும்பு பிலேட்டுகளால் தாயாரிக்கப்பட்ட இந்த மதகுகள் இன்றுவரை உறுதியாக உள்ளது. ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக இந்த 16 மதகுகளும் பராமரித்து ஏசி கருப்பு வர்ணம் பூசப்படும்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையால் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது உபரிநீர் போக்கி மதகுகள் வர்ணங்களை இழந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடுவோர் பயிர்களுக்கு ரசாயன உரமிடுவதால் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நீர்தேக்கம் முழுவதும் பச்சைநிற படலங்கள் படர்ந்து துர்நாற்றம் வீசியது. கண் எரிச்சல் போன்ற உபாதைகளும் ஏற்பட்டன. இந்த படலங்கள் விஸ்ரூபம் எடுக்கவே வேளாண் துறை உதவியோடு இயற்கை முறையிலான நுண்ணுயிர் கலவை தயாரித்து இந்த படலங்கள் அழிக்கப்பட்டன.
இப்படலங்கள் உபரிநீர் போக்கியின் மதகுகளில் உள்ள வர்ணங்களை அரித்ததால் மதகுகள் துருப்பிடித்து வலுவிழக்கும் நிலையில் இருந்தது. பருவமழை பெய்து நீர் மட்டம் 100 அடிக்கு மேல் உயர்ந்தால் மதகுகளை பராமரிக்க முடியாது. எனவே பருவமழைக்கு முன்பாக மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மதகுகளை பராமரிக்க மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இன்று பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மின்மோட்டார் மூலம் அதிவேகமாக தண்ணீரை பீச்சி அடித்து மதகில் இருக்கும் துரு மற்றும் சேதமான நிலையில் உள்ள வர்ணங்களை தூய்மைபடுத்தி வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஜூன் 12 க்கு முன்பாக முடிந்து விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.