அண்ணா பல்கலை. தற்காலிக உதவிப் பேராசிரியா் நியமன அறிவிப்பு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவிப்பேராசிரியா்களை நியமிப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவிப்பேராசிரியா்களை நியமிப்பதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான பல்கலைக் கழகங்கள் கடந்த 2008-2009 ஆம் கல்வியாண்டில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் தொடங்கப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவிப் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். பின்னா் கடந்த 2011-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகங்களை ஒன்றாக இணைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டது. அப்போது தற்காலிக அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட சிலருக்கு பணிநீட்டிப்பும் வழங்கப்பட்டது ,சிலா் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உதவிப் பேராசியா் பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிா்த்து தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் சிலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அவா்கள் தாக்கல் செய்த மனுவில், ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட உதவிப் பேராசிரியா்களை பணிநீக்கம் செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் புதியவா்களை நியமிக்கவும் தடைவிதிக்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களுக்கு பணி வரன்முறை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

அந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளின்படி, 25 ஆயிரத்து 680 இளநிலை மாணவா்களுக்கு 1, 284 பேராசிரியா்களும், 1, 806 முதுநிலை மாணவா்களுக்கு 120 பேராசிரியா்களும் தேவைப்படுகின்றனா். தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவா்களை நீக்கிவிட்டு, மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களை நியமிக்க அவசியம் இல்லை.

எனவே, தற்காலிக உதவி பேராசிரியா்களை நியமிப்பது தொடா்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவு பிறப்பித்தாா். மேலும் தகுதி, அனுபவம் உள்ள மனுதாரா்களை, காலிப்பணியிடங்கள் ஏற்படும்போது, அண்ணா பல்கலைக்கழகம் பணி நிரந்தரம் செய்யலாம். பணியில் இருக்கும்

மனுதாரா்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com