ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான திரையரங்குகளுக்கான உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 3 திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

சென்னை: ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 3 திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு, சொந்தமாக 3 திரையரங்குகள் உள்ளன. நடிகர் சூர்யா நடித்த கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏ.சந்திரசேகரன், இந்த 3 திரையரங்குகளையும்
புதுப்பித்து திரைப்படங்களை திரையிட்டு நிர்வாகம் செய்ய முன்வந்த அவர், திரையரங்குகளை புதுப்பிக்க சுமார் ரூ. 5 கோடி செலவு செய்தார்.

இந்த தொகைக்கு உத்தரவாதமாக 3  திரையரங்குகளுக்கு உரிய உரிமங்கள், கட்டட உறுதித்தன்மை சான்று, கட்டட திட்ட வரைப்படம், காப்பீட்டு பத்திரம், மின்சார வாரிய ஆய்வாளர் சான்று உள்ளிட்ட அசல் ஆவணங்கள் சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் 3  திரையரங்குகளையும் அடமானம் வைத்து வங்கியில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம், திரையரங்குகளை கையகப்படுத்த முற்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. திரையரங்குகளை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியுடன் திரையரங்குகளுக்கான உரிமம்  முடிவடைந்தது. உரிமத்தை புதுப்பிக்க அசல் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கவேண்டும். இந்த ஆவணங்கள் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இல்லாததால், உரிமத்தை புதுப்பிக்க ஆட்சியர் மறுத்து விட்டார். 

இதனை எதிர்த்து நில நிர்வாக ஆணையரிம் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மின்வாரிய ஆய்வாளர் சான்றின் நகல் வழங்க சேலம் மின்வாரிய ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரியும்,  3 திரையரங்குகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கக் கோரியும் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தார். 

இதனை எதிர்த்து சந்திரசேகரனும் வழக்கு தாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம்,
மின்வாரிய ஆய்வாளர் சான்றின் நகல் வழங்கவும், திரையரங்குகளுக்குத் தற்காலிக உரிமம் வழங்கவும் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து ஏ.சந்திரசேகரன் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சந்திரசேகரன் தரப்பில் வழக்குரைஞர் அமீது இஸ்மாயில், ஆஸ்கார் ரவிச்சந்திரன்

தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்காரவேலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்தனர். 

மேலும், அசல் ஆவணங்கள் சந்திரசேகரனிடம் இருக்கும்போது, அந்த ஆவணங்களின் நகல் வழங்க உத்தரவிட முடியாது. எனவே, 3 திரையரங்குகளுக்கும் வழங்கப்பட்ட மின்வாரிய ஆய்வாளர் சான்றின் நகலையும், 3 உரிமங்களையும் சேலம் மாவட்ட ஆட்சியர் உடனே ரத்து செய்ய வேண்டும்.  

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை வரும் நவம்பர் 20 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com