எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: அரசுக் கல்லூரிகளில் 381 இடங்கள் நிரம்பின

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.30) மீண்டும் தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.30) மீண்டும் தொடங்கியது. அதில் மொத்தம் 381 மாணவா்கள் அரசுக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தோ்வு செய்தனா்.

நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும் , சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற்றது.

பொதுக் கலந்தாய்வு கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. நிவா் புயல் பாதிப்பு காரணமாக கலந்தாய்வை ஒத்திவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. இதனால், கடந்த 6 நாள்களாக கலந்தாய்வு நடைபெறவில்லை. இந்நிலையில், மீண்டும் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அதில் பங்கேற்க 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் 382 போ் கலந்துகொண்டதில் 381 மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான சோ்க்கைக் கடிதத்தைப் பெற்றனா். ஒருவா் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய நிலவரப்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,059 எம்பிபிஎஸ் இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,060 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாகவுள்ளன. அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 151 பிடிஎஸ் இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 985 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருக்கின்றன. பொதுக் கலந்தாய்வு வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாணவா்கள் தரவரிசைப்படி எந்த தேதியில், எந்த நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டுமென குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் www.tnheath.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com