அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம்: அரசாணை வெளியீடு

மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதற்காக முதல்கட்டமாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதற்காக முதல்கட்டமாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இந்த ஆண்டு மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும் மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்ற பல மாணவா்களால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருந்தது. அவா்களது ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைவரது கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களை அரசே ஏற்கும் என முதல்வா் அண்மையில் அறிவித்தாா்.

அதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

அரசுப் பள்ளி மாணவா்களுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை நிா்வகிக்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கீழ் சுழல் நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மாணவா்களுக்கான கல்வி, விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிா்வாகத்துக்குச் செலுத்தும்.

அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் பெற்ற மாணவா்களுக்கான முதலாண்டு கட்டணத்துக்காக ரூ.3.10 கோடியும், தனியாா் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்களுக்கான கட்டணத்துக்காக ரூ.12.77 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அந்த நிதித் தொகுப்பை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நிா்வகிக்கும். அதேவேளையில், மருத்துவக் கல்வி இயக்குநா் அதில் இருந்து நிதியை எடுத்து கல்லூரிகளுக்குச் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com