இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்?

அரசு இணையத்தில்  சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்?  மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அரசு இணையத்தில்  சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்?  மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"
கட்டடங்கள் கட்டுவதற்கு ஆற்று மணல் அவசியம் தேவைப்படுகிறது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. நானும் , என்னைப் போல் பொதுமக்களும் கட்டடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு மணல் இணையதள சேவை மூலம் பலமுறை விண்ணப்பம் செய்ய முயற்சி செய்தோம்.

ஆனால், இணையதள சேவையில் பொதுமக்கள் நுழைவு மற்றும் லாரி உரிமையாளர்கள் நுழைவு என இரண்டு உள்ளது. பொதுமக்கள் நுழைவு மூலம் உள்சென்று மணலை புக்கிங் செய்ய, வெள்ளிக்கிழமை மட்டும் தான் புக்கிங் செய்ய முடிகிறது . 

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மணல் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்கள்  அரசாங்கத்திடம் ரூ.6,500-க்கு மண்ணை வாங்கி ரூ. 40 ஆயிரத்திற்கு பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். எனவே அனைத்து பொதுமக்களும் நியாயமான விலைக்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  "அரசு மணல் குவாரியில் ஒரு யூனிட்  2000 ரூபாய்க்கும், இறக்குமதி மணல் 1 யூனிட் 10,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன .

ஆனால் வெளி மார்கெட்டில்   ஒரு யூனிட்  மணல் 15,000 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு லோடு 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

அவ்வாறிருக்கையில், சாதாரண மக்களுக்கு  மணல், எப்படி சரியான விலையில் கிடைக்கும்?   அரசு இணையத்தில்  சாதாரண பொது மக்களுக்கு இலகுவாக மணல் கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்?  மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என கேள்வி எழுப்பினர்.


தொடர்ந்து, இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல்,  பொதுமக்களுக்கு உரிய விலையில்  மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வரைபட அனுமதி வைத்துள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இலகுவாக மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறி, இதுகுறித்து தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர்  28-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com