மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் முன்பு கடைகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் 

வாரச்சந்தை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் வேதனையடைகின்றனர்.
மானாமதுரையில் வாரச்சந்தையன்று ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயில் முன்பு கடை விரிக்கும் வியாபாரிகளால் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு  ஏற்படுகிறது.
மானாமதுரையில் வாரச்சந்தையன்று ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயில் முன்பு கடை விரிக்கும் வியாபாரிகளால் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோவில் முன்பு ஒவ்வொரு வாரமும் அமைக்கப்படும் வாரச்சந்தை கடைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் வேதனையடைகின்றனர். கடைகள் அமைக்கப்படுவதை தடுக்க காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

மானாமதுரையில் வைகையாற்றை ஒட்டி சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட  ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் பிரதோஷம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து தடை செய்யப்பட்டது. 

அதன்பின் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வியாழக்கிழமை வாரச்சந்தை நடத்த தடை தொடர்ந்தாலும் வியாபாரிகள், விவசாயிகள் வைகையாறு, ஆனந்தவல்லி கோவில் எதிர்புறம் மற்றும் பல்வேறு இடங்களில் கடைவிரித்து வியாபாரம் செய்தனர். 

கடைகளிலிருந்து வீசப்படும் காய்கறி கழிவுகளால் மேற்கண்ட பகுதிகளில் குப்பகள் தேங்கி காய்கறி கழிவுகளை சாப்பிடுவதற்கு மாடு உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சண்டையிடும் சம்பவங்கள் நடந்தன. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வாரச்சந்தைகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதால் மானாமதுரையில் வாரச்சந்தை வளாகம் திறக்கப்பட்டு அதற்குள் பல வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மானாமதுரை அருகேயுள்ள கிராமங்கள் மற்றும் பரமக்குடி உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகள் வாரச்சந்தை வளாகத்தை புறக்கணித்து தொடர்ந்து ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோவில் முன்பு கடை விரித்து வியாபாரம் செய்கின்றனர். பல வியாபாரிகள் கோவிலுக்கு வரும் பாதையை அடைத்து கடை விரிக்கின்றனர். சந்தைக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை கோவிலுக்கு எதிரிலேயே நிறுத்திச் செல்கின்றனர். சில நேரங்களில் கோவிலுக்கு முன்பு மீன், கருவாடு உள்ளிட்ட இறைச்சி பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது மனம் வேதனையடைகின்றனர். 

மேலும் வியாழக்கிழமை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்யும்போது கோவிலுக்கு வெளியே வியாபாரிகள் போடும் கூச்சலால் மன அமைதியுடன் சாமி தரிசனம் செய்யக்கூட முடியாத நிலை உள்ளதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

வாரச்சந்தை முடிந்து அங்கு கிடக்கும் கழிவுகளை சாப்பிட கோவிலுக்கு முன்னதாகவே மாடு, நாய்கள் சண்டையிடுவதால் கோவிலுக்கு வர பக்தர்கள் அச்சப்படுகின்றனர். 

எனவே மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் இணைந்து ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோவிலுக்கு முன்பு வியாழக்கிழமை சந்தைக்கடைகள் அமைப்பதை தடுத்து கோவிலின் புனிதத்தை காக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com