வாழப்பாடியில் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கமம்: கரகம், பம்பை நையாண்டி மேளக் கச்சேரி நடத்தி அசத்தல்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் நையாண்டி மேளக் கச்சேரி நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்.
வாழப்பாடியில் நையாண்டி மேளக் கச்சேரி நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை, நையாண்டி மேளக்கச்சேரி நடத்தி அசத்தினர். ஏழு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை, மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியால், கையடக்கக் கருவியான செல்லிடப்பேசிக்குள்ளேயே அனைத்தும் அடங்கி விட்டது. சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகள், உலகில் பல்வேறு பகுதி நிகழ்வுகளையும், இருக்கும் இடத்தில் இருந்தே சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பாமர மக்களும் கண்டுகளித்து கொள்கின்றனர்.  

இதனால், உடலை வருத்தி  நாட்டுப்புற கலைஞர்கள் நடத்தும் நாடகங்கள், தெருக்கூத்து, நையாண்டி  மேளக்கச்சேரி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளுக்கு, கிராமப்புற மக்களிடையேயும் வரவேற்பு குறைந்து வருகிறது.

ஆனால், சேலம், நாமக்கல், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தில் கிராமங்களில்,  கோவில் திருவிழாக்களில், இன்றளவும் கரகம், குறவன்–குறத்தி, தப்பு, பம்பை, நாதஸ்சுவரம், உறுமி, உடுக்கை, கும்மி, மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், சமூக, வரலாற்று நாடகங்கள் நடத்துவதை  தொடர்ந்து வருகின்றனர்.

வாழப்பாடியில் நையாண்டி மேளக் கச்சேரி நடத்திய நாட்டுப்புற கலைஞர்கள்.

திருமணம், காதணிவிழா, மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களிலும் மேள வாத்தியங்களோடு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால்,  ஏறக்குறைய 30 ஆயிரத்திற்கும்  நாட்டுப்புறக் கலைஞர்கள், நாடக நடிகர்கள், ஒப்பனை கலைஞர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து கோவில் திருவிழாக்களும், திருமணம், காதணி விழா, மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.

இதனால், நாட்டுப்புற கலைஞர்கள் நாடகத்துறை கலைஞர்கள்  வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பு சங்க கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் வாழப்பாடியில், கூத்தப்படையாச்சி  திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில, மாவட்ட நிர்வாகிகளை வரவேற்க, நூற்றுக்கும் மேற்பட்ட  நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்றிணைந்து, கரகம், பம்பை தப்பு, நாதஸ்வரம், நையாண்டி மேளக் கச்சேரி ஊர்வலம் நடத்தினர். 7 மாதங்களுக்குப் பிறகு  நட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்ததால், மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

இன்று நடைபெறும் இக்கூட்டத்தில், வாழப்பாடி, ஆத்தூர், ராசிபுரம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த கூட்டமைப்பில் இணைகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com