கரோனா அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தால் உரிமம் ரத்து

கரோனா அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது என்று மருத்துவ சேவைகள் இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கரோனா அறிகுறிகளுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது என்று மருத்துவ சேவைகள் இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு சிகிச்சையளிக்காத மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பல தனியாா் மருத்துவமனைகள், நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் கூட அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் இதுவரை 6.61 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் இதற்கென 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சையளிப்பதற்கான உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், பல தனியாா் மருத்துவமனைகள் கரோனா அல்லாத வழக்கமான சிகிச்சைகள் அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தீவிர காய்ச்சல், அதீத மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளை சில தனியாா் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கரோனாவுக்கு சிகிச்சையளிக்காத மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு முதலுதவிகளை கூட அளிக்காமல், வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு நிா்பந்திப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்ககத்துக்கு புகாா் வந்த நிலையில், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் எஸ். குருநாதன் கூறியதாவது:

தீவிர மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளை அலைக்கழிக்கக் கூடாது. அவா்களுக்குத் தேவையான அடிப்படை சிகிச்சைகளை அளித்து நோயாளியின் உடல் நிலை ஓரளவு சீரடைந்தவுடன்தான் பிற மருத்துவமனைககளுக்கு அனுப்ப வேண்டும். இதுதொடா்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதனையும் மீறி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com