ரூ.10 ஆயிரம் கடனுக்கு அலையும் மாற்றுத் திறனாளி

கரோனா பொதுமுடக்கத்தால் செய்து வந்த தொழில் பாதிப்படைந்ததையொட்டி தொழிலை மேம்படுத்தி தொடர வங்கிக் கடன் கேட்டு சீர்காழியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கடந்த 3 மாதங்களாக அலைந்துவருகிறார்.
மூன்று சக்கர சைக்கிளில் பொருள்கள் விற்பனை செய்து வரும் மாற்றுத் திறனாளி நடராஜன்.
மூன்று சக்கர சைக்கிளில் பொருள்கள் விற்பனை செய்து வரும் மாற்றுத் திறனாளி நடராஜன்.


சீர்காழி: கரோனா பொது முடக்கம் காரணமாக ஏற்கெனவே செய்து வந்த தொழில் பாதிப்படைந்ததால், தொழிலை மேம்படுத்தித் தொடர வங்கிக் கடன் கேட்டுக் கடந்த 3 மாதங்களாக அலைந்துகொண்டிருக்கிறார் சீர்காழியைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி.

அவருக்குக் கடன் கிடைக்க, பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

சீர்காழி பிடாரி கீழ வீதியைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான எம். நடராஜன் (51). இவர் இளம்பிள்ளைவாத பாதிப்பால் கால்கள் செயலிழந்தவர். திருமணமான இவர், சீர்காழி தேர் வடக்கு வீதி சட்டநாதர் கோயில் வடக்குக் கோபுர வாசல் அருகே பெட்டிக் கடை வைத்து நடத்திவந்தார். 

கோயிலுக்குத் தேவையான அர்ச்சனைப் பொருள்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 200 வரை அமர்ந்த இடத்திலேயே சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார் நடராஜன்.

கரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், திருக்கோயில்களும் பக்தர்கள் வருகைக்குத் தடை விதித்து மூடப்பட்டன.

இவருடைய தொழிலும் முடங்கியது. கடந்த 5 மாதங்களாகப் பெட்டிக்கடையை  முற்றிலும் பூட்டிவிட்டாலும் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்தில் நடராஜன், தனது மூன்று சக்கர சைக்கிளில் எண்ணெய், பிஸ்கெட், அப்பளம், வேர்க்கடலை, திரிநூல், தீப்பெட்டி போன்ற சிறிய அளவில் பொருள்களை தெருத் தெருவாக மூன்று சக்கர சைக்கிளில் அலைந்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

காலை முதல் மாலை வரை மூன்று சக்கர சைக்கிளைத் தனது கைகளால் சுழற்றிச் சுற்றி வந்தாலும் நாள் ஒன்றுக்கு ரூ. 100 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. குடும்பத்தை நடத்தக் கஷ்டப்பட்டு வரும் நடராஜன், சீர்காழி மத்திய கூட்டுறவு வங்கியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறுதொழில் மேம்பாட்டிற்காக ரூ. 10 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். 

கடன் பெறுவதற்கான அனைத்து படிவங்கள், சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பம் செய்தும் 3 மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வரும் நடராஜனுக்கு இதுவரை கடன் தொகை கிடைக்கவில்லை.

இந்தக் கடன் தொகையைப் பெற்று முன்புபோல் தனது பெட்டிக்கடையை மேம்படுத்தி அலையாமல் இருந்த இடத்திலேயே தொழில் செய்ய நினைத்த நடராஜனுக்கு மன உளைச்சலே மிஞ்சியது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மாற்றுத் திறனாளி நடராஜனுக்கு வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com