ஒரு நெல்மணி கூட மிச்சம் வைக்காமல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்

ஒரு நெல்மணி அளவு கூட மிச்சம் வைக்காமல் அரசு நேரடி நெல் கொள்மல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
மேலநெம்மேலியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ஆய்வு செய்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் .
மேலநெம்மேலியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ஆய்வு செய்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் .


ஒரு நெல்மணி அளவு கூட மிச்சம் வைக்காமல் அரசு நேரடி நெல் கொள்மல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம், தளிக்கோட்டை, மேலநெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், புதன்கிழமை தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் வரலாற்றுச் சாதனையாக சென்ற ஆண்டு காரீப் பருவத்தில் 32.41லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதே பருவத்தில் நிகழாண்டு அக்டோபர் 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தேதி வரையில் 21 நாள்களில் 65 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என குறை சொல்பவர்கள் ஆட்சியில் கூட, 21 நாள்களில் 6 லட்சம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் குறுவை அறுவடை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் 3.55 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், 3 லட்சத்து 15ஆயிரம் ஏக்கர் பரப்பில் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன.

அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் 842 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் தினந்தோறும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் 17 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற சூழல் இருந்தாலும். கூடுதல் ஈரப்பதத்தோடு விவசாயிகள் நெல்லை கொண்டுவந்தாலும்,மறுக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்,நாளொன்றுக்கு 5லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு டாரஸ் லாரியில் அதிகபட்சமாக 500 முட்டைகள் மட்டுமே ஏற்ற முடியும். தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அன்றைய தினமே குடோன்களுக்கு எடுத்துச் செல்லுகின்ற வகையில் அனைத்து லாரிகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்திருக்கக் கூடிய விவசாயிகள் நெல் கொள்முதலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. குறுவை நெல் கொள்முதலில் ஏற்படும் மழை உள்ளிட்ட இடையூறுகள் விவசாயிகள் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், எந்த இடையூறுகளாக இருந்தாலும், அதனை எதிர்கொண்டு தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விளைவிக்கப்பட்ட நெல்லில் ஒரு நெல்மணி அளவு கூட மிச்சம் வைக்காமல் அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்படும் என்றார் அமைச்சர்.

தளிக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் குறைகளை கேட்டறியும் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்
தளிக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் குறைகளை கேட்டறியும் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்

முன்னதாக,கொள்முதல்நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் மற்றும் எடை ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த விவசாயிகளிடம் கொள்முதலில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என கேட்டறிந்தார். பின்னர், கொள்முதல் நிலைய ஊழியர்களிடமும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது அமைச்சருடன், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலர் தயானந்தா கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் எம்.சுதாதேவி, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், பொது மேலாளர் (வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com